Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவ்ளோதான்ல.. காக்கா கரைந்தால் விருந்தாளி வருவார்கள்னு எதிர்பார்த்த கடைசி தலைமுறை இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.. சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேலே.. இதை எல்லாம் நாம் எங்கேயோ கேள்விபட்டிருப்போம். இவை அனைத்தும் நம்மை மகிழ்ச்சியாக சொந்த பந்தங்களுடன் வாழ வலியுறுத்தும் வரிகள். ஆனால் இன்று நாம் அப்படி இருக்கிறோமா? என்று நமக்குள்ளேயே கேள்வியை கேட்டு பார்த்தால் பலருக்கும் எதிர்மறையான விடை தான் கிடைக்கும். ஒரு காலத்தில் சொந்தக்காரங்க வருகிறார்கள் என்றால் நல்ல வெடக்கோழியை அடிச்சி சமைத்த சொந்த உறவுகள் இப்போது சொந்தக்காரர்களை கண்டாலே தூர ஒதுங்கி நிற்கிறது. இந்த தலைமுறை மாற்றம் ஏன் நடக்கிறது?

இன்று சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தை பார்த்து கொண்டிருந்த நேரம் அது. திடீரென்று ஒரு பதிவு கண்ணில் பட்டது. அந்த பதிவை gladius என்ற பெயரில் பயன்படுத்துபவர் பதிவிட்டு இருந்தார். அதில், ‛‛ஞாயிறு அன்று வீட்டில் ஒரு விசேஷம் நடத்தினேன். இருவீட்டார் இடையேயான ஈகோ பிரச்சனையை அங்கே காட்டிவிட்டார்கள். இரண்டு நாள்களாக ஒரே மாத்தி மாத்தி புகார். ஏன்டா விழா நடத்தினோம் என்ற மனநிலை. கடும் மனஉளைச்சல். எந்த ஃபங்சனுமே வைக்ககூடாது என்ற மனநிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள்'' என தனது கவலையை பகிர்ந்து இருந்தார்.

family joint family Nuclear family

ஆமா.. நீங்களே சொல்லுங்களேன்.. ஒருவர் வீட்டில் பணம் செலவு செய்து விசேஷம் வைப்பது எதற்காக.. வெவ்வேறு ஊர்களில் பிரிந்து கிடக்கும் சொந்த பந்தங்களை ஒன்றாக அழைத்து வீட்டு வருவோரை வரவேற்று வாய்க்கு ருசியாய் சமைச்சி போடத்தானே. இந்த அறுசுவை விருந்தோடு அவர்களிடம் நலம் விசாரித்து, பிள்ளைகளின் படிப்பு, வேலை பற்றி விசாரிப்பதற்கு தானே.. அப்படி இருக்கும் விசேஷத்தில் வந்து ஈகோ பிரச்சனையில் கும்மியடித்தால் அனைவருக்கும் கோபம் வரும் தானே.

இதை சொந்தக்காரர்களிடம் கூறினால் நம் மீது பாய்ந்து விடுவார்கள் என்றால் அந்த அன்பர் தனது எக்ஸ் பக்கத்தில் வந்து புலம்பியிருந்தார். இதை மாசி என்ற பெயரில் செயல்படும் ஒருவர் பார்த்தார். அதில், ‛‛தங்கள் வீட்டிற்கு உறவுகள் வந்தால் மகிழ்ச்சி.. வராவிட்டால் பெரும் மகிழ்ச்சி என்னும் நிலை.. இப்ப இதை நிறைய இடத்துல பாக்க முடியுது. சொந்தக்காரங்க வீட்டுக்கு போனாவே இவன் எப்படா கிளம்புவான் என்கிற மனநிலையில் தான் இருக்காங்க''என்று தன்பங்குக்கு கவலையை பகிர்ந்தார்.

இவரது இந்த பதிவுக்கு டீ என்ற பெயரில் இயங்குபவர், ‛‛தற்போதைய குடும்பங்கள் (நியூக்ளியஸ் பேமிலி) புதிதாக ஒருவரை accomodate செய்ய மனதளவில் தயாராக இல்லை. அதிகபட்சம் ஹாலில் உட்கார வைத்து ஸ்நாக்ஸ் கொடுத்து பத்து நிமிடங்கள் பேசினாலே அதிகம் என்ற நிலை வந்து விட்டது. முன்னர் எந்தவித முன்னறிவிப்புமே இல்லாமல் குழந்தைகளை லீவுக்கு உறவினர் வீட்டுக்கு அனுப்புவார்கள். ரொம்ப நாளாச்சு பார்த்து பார்த்துட்டு போலாம் என பஸ் பிடித்து எடுத்தேறி வந்து பார்த்துவிட்டு போவார்கள்.

திருமண வீடுகள், மற்ற விசேஷ வீடுகள், துக்க வீடுகளுக்கு சம்மன் இல்லாமல் ஆஜர் ஆவார்கள். போட்டி பொறாமை இருந்தாலும் தற்போதைய சூழல் போல stiff competition இருக்காது. அவரவர் வாழ்க்கை அவரவர் முன்னேற்றம் அவரவர் ஓட்டம். யாரையும் குறை சொல்ல முடியாத சூழல். சமூக வலைதளங்களில் தங்களுக்கு ஏற்ற நட்புகளை வைத்து இன்னும் இருக்கும் வாழ்வை கடத்திக் கொள்ளலாம் என்னும் நிலையில் பலர்'' என பதிவிட்டு இருந்தார்.

இதனை பார்த்தபோது போது அட ஆமால்ல.. நமது பாட்டி, தாத்தா காலத்துக்கும், இப்போது நம்முடைய காலத்துக்கும் அதிக இடைவெளி இருக்குல்ல.. 70, 80, 90ஸ் காலத்தில் பிறந்த நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும் சொந்தம் என்றால் எப்படி இருக்கும். குறிப்பாக கூட்டு குடும்பம் என்றால் எப்படி இருக்கும் என்று.. அப்பா, அம்மாவுடன், பாட்டி, தாத்தா, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா - சித்தப்பாவின் மகன், மகள் என வீடே எப்போதும் கலகலப்பாக இருந்திருக்கும்.

அதேபோல் தீபாவளி, கோவில் கொடை விழா வந்துவிட்டால் இன்னும் வீடு களைகட்டிவிடும். இதற்கு வீட்டுக்கு வரும் சொந்த உறவினர்கள் தான் காரணம். அண்ணன், தம்பி மகன் - மகள் என்றால் பெற்ற மகன், மகளை விட அதீத பாசத்தை அள்ளி தரும் அன்பான அத்தை, மாமா, உரிமையாய் பேசி விளையாட முறைப்பையன், முறைப்பொண்ணு, உள்ளிட்டவர்களின் வருகையால் குடும்பமே குதுகலமாகிவிடும். அதேபோல் விடுமுறை நாட்களில் பாட்டி, தாத்தா, மாமா, பெரியப்பா, சித்தப்பா வீட்டில் தான் நமது வாழ்க்கையை இருக்கும். இன்னும் ஒருபடி மேலே சொல்ல வேண்டும் என்றால் நம்மில் பலரும் கூட பாட்டி, தாத்தா, சித்தப்பா அரவணைப்பில் தான் பள்ளி பருவத்தையே கழித்து இருப்போம்.

ஆனால் இன்று நம் அனைவரின் வாழ்க்கையும் மாறிவிட்டது. திருமணம் ஆனவுடன் அனைவரும் தனிக்குடித்தனத்தை நோக்கி பயணிக்கிறோம். பெற்ற அம்மா, அப்பா, உடன்பிறந்த சகோதர, சகோதரனை விட்டு பிரிந்து தனியாக வாழ்க்கையை நடத்த தொடங்கி விடுகிறோம். தனிக்குடித்தனம் என்பது பெற்றோர், அவர்களின் குழந்தைகள் என்ற வகையில் மட்டுமே மிகவும் சுருங்கி போய் சிறிய குடும்பமாக இருக்கிறது. தாய், தந்தை இருவரும் சம்பாதிப்பதில் கவனம் செலுத்துவதால் குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியாது.

ஆனால் கூட்டு குடும்பத்தில் அப்படி இல்லை. அப்பா, அம்மா சம்பாதிக்க சென்றாலும் கூட பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, பாட்டி, தாத்தாவின் அரவணைப்பில் கதை கேட்டும், பிடித்த பண்டம், பதார்த்தங்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை குழந்தைகளுக்கு கிடைத்திருக்கும். எப்போது அந்த குழந்தைகள் தணிமையை உணரமாட்டார்கள். ஆனால் தனி குடும்பத்தில் பெற்றோர் பணிக்கு சென்றால் குழந்தைகள் தணிமையில் இருப்பார்கள். அவர்களின் மனம் சஞ்சலப்பட்டு தவறான பாதையை நோக்கி செல்லவும் வாய்ப்புள்ளது.

மேலும் கூட்டு குடும்பத்தில் வாழும்போது ஒரே வீட்டில் அனைவரும் இருப்போம். இதனால் மின்சாரம், உணவு செலவு என அனைத்து செலவுகளும் பெருமளவு குறையும். ஆனால் தனிக்குடும்பத்தில் நமக்கான செலவு என்பது அதிகரிக்கும். இது ஒருபுறம் இருக்க முன் காலத்தில் எல்லாம் உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சு.. அதான் டவுன் பஸ்ஸை பிடிச்சி ஒரு எட்டு பார்த்துட்டு வந்துவிடலாம்னு பலரும் நம்மை நியாபகம் வைத்து வீட்டுக்கு வருவார்கள். இப்படி வருவோர் ஒருவாரம், ஒரு மாதம் வரை தங்கி இருப்பார்கள். ஆனால் இன்று அப்படி யாரும் நம்மை தேடி வருவது இல்லை. வீட்டுக்கு வரும்போதே செல்போனில் தொடர்பு கொண்டு வருகின்றனர்.

இதனால் எதிர்பாராமல் வரும் விருந்தாளிகளை சிரித்த முகத்துடன் வரவேற்று சகஜமாக பேசும் மனநிலை இப்போது இருப்பது இல்லை. அதேபோல் முன்காலத்தில் எல்லாம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை காகம் அதிகமாக இருக்கும். இப்போது காகங்கள் மறைந்தது போல் தான் அது சொல்லிய செய்தியும் மறைந்துவிட்டது. இதற்கு முன்பு காகங்கள் வீட்டின் முன்பு கரைந்தால் வீட்டுக்கு வருவார்கள் என பெரியவர்கள் சொல்வது உண்டு. அப்படியான பல சூழ்நிலைகளில் காகம் கரைந்த பிறகு விருந்தாளிகள் நம்மை வீட்டுக்கும் என்ட்ரி கொடுத்து இருக்கலாம்.

அப்படி வருவோருக்கு வீட்டில் காபி, டீ போட்டு கொடுப்பதும், அந்த சமயத்தில் பெண் விருந்தாளி என்றால் சமையல் கட்டில் நமது அம்மாவுக்கு உதவி செய்வதும், ஆண் விருந்தாளி என்றால் அப்பாவுடன் சகஜமாக பேசி உரையாடி இருப்பதையும் நாம் பார்த்து இருப்போம். ஆனால் சில நேரங்களில் காகம் கரைந்தாலும் கூட விருந்தாளி இன்றி நமது எதிர்பார்ப்பு பொய்த்து போய் இருக்கலாம்.

ஆனால் இன்று நம் வீட்டுக்கு வரும் பல விருந்தாளிகளை வீட்டுக்குள்ளே அனுமதிப்பது இல்லை. வீட்டின் வெளியே உள்ள ஹாலில் உட்கார வைத்து காபி, டீ, ஜூஸ் கொடுத்து அப்படியே திருப்பி அனுப்பி விடுகிறோம். அதேபோல் நகரங்களில் கதவு இடுக்கில் லென்ஸ் வைத்து வெளியில் நிற்பது யார் என்று பார்த்துவிட்டு பிடிக்காதவர்கள் என்றால் கதவை திறக்காமல் அப்படியே அனுப்பி வைப்பதும் ஆங்காங்கே நடக்கிறது.

இதற்கு சொந்தக்காரர்கள் பார்க்கும் சகுனி வேலைகள் ஒரு காரணமாக இருக்கலாம். அதேபோல் நாம் படித்துள்ளோம். அதிக சம்பளம் வாங்குகிறோம். இதனால் யாருக்கும் அடங்கி போவது இல்லை. சொந்தக்காரர்கள் யாரும் வேண்டாம். சுயமாக வாழலாம் என மேலெழும் எண்ணமும் இன்னொரு காரணமாக இருக்கலாம். இந்த 2 விஷயங்களில் எதுவாக இருந்தாலும் உண்மையில் அது வருத்தமான செய்தி தான்.

எந்த வகையில் வருத்தம் என்றால் தமிழர் மரபு என்பது வீட்டு வருவோரை வாசல் வரை வந்து வரவேற்பதும், அதன்பிறகு வீட்டை விட்டு கிளம்பும்போது அவரை வாசல் வரை சென்று வழியனுப்புவதும் தான். ஆனால் மாறி வரும் வாழ்க்கை முறையில் கூட்டு குடும்பம் மறைந்து தனிக்குடும்பம் தலைத்தூக்கிய நிலையில் சொந்தப்பந்தங்களை நாம் யாரும் மதிப்பது இல்லை. இந்த மனநிலையை இனியாவது நாம் மாற்றி வாழ பழக வேண்டும். உண்மையில் நல்ல சொந்த பந்தங்களுடன் கூடிய வாழ்க்கை என்பது மட்டற்ற மகிழ்ச்சியை தரும் என்பதில் ஐயமில்லை.. இப்போது சொல்லுங்கள் உங்களின் குடும்பம் எப்படிப்பட்டது என்று?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+