சொல்லி அடித்த கில்லி விஜய்? திமுகவின் வாக்கு வங்கியில் கைவைத்த மக்கள்... மவுன புரட்சியின் முடிவு?
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்திகளாக விளங்கிய திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் துருவங்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்றைய தேர்தல் முடிவுகள் ஒரு மாபெரும் புரட்சியை பறைசாற்றி வருகின்றன. திராவிட கட்சிகளிடையே அதிர்ச்சியும் எழுந்து வருகிறது.
ஏப்ரல் 23-ம் தேதி தமிழக மக்கள் அமைதியாக செலுத்திய வாக்குகள், இன்று வாக்கு எண்ணிக்கை மையங்களில் அதிகார வர்க்கத்திற்கு எதிரான இடியாக முழங்கி கொண்டிருக்கின்றன.

இன்று காலை முதலே எதிர்பாராத திருப்பங்களை சந்தித்து வரும் தேர்தல் களத்தில், யாரும் கணித்திடாத வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அசுர பலத்துடன் முன்னிலை வகித்து வருகிறது.
தவெக-வின் தொடர் முன்னிலை
தற்போதைக்கு தமிழக வெற்றிக் கழகம் 115 தொகுதிகளில் முன்னிலை பெற்று முதலிடத்தில் உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 75 இடங்களுடன் 2ம் இடத்திலும், ஆளுங்கட்சியான திமுக வெறும் 49 இடங்களைப் பெற்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, திமுகவின் கோட்டை என்று கருதப்படும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத் தொகுதிகளில் கூட ஸ்டாலின் மற்றும் உதயநிதி தலைமையிலான அமைச்சரவைப் பட்டாளம் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது, அக்கட்சியினரை நிலைகுலைய செய்து வருகிறது.
ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் புரட்சி
"ஆட்சி மாற்றத்தை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்" என்பதற்கு இன்றைய வாக்கு எண்ணிக்கை நிலவரமே சாட்சியாக அமைந்துள்ளது. சுமார் 12.5 லட்சம் புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் யாருக்கு என்ற கேள்விக்கு, இப்போது ஓரளவு விடை கிடைத்து வருகிறது.
தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியும், மாற்றத்திற்கான வேட்கையுமே தவெக-வின் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
"ஜோசப் விஜய் சந்திரசேகர் எனும் நான்..." என்று தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்கும் தருணத்தை நோக்கி விஜய் மிக நெருக்கமாக வந்துவிட்டதாகவே தெரிகிறது. 118 இடங்கள் என்ற பெரும்பான்மை இலக்கை தவெக நெருங்கிக் கொண்டிருப்பதால், விஜய் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
தொங்கு சட்டசபை சூழல்?
எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் 'தொங்கு சட்டசபை' அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவந்த நிலையில், தற்போது தவெக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரகசியத் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.
அதாவது, தவெக முதல்வர் பதவியைக் கோர வாய்ப்புள்ள நிலையில், அதிமுக முக்கிய அமைச்சரவைப் பொறுப்புகளைப் பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரை நூற்றாண்டு கால 2 முனைபோட்டியை உடைத்து, ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை விஜய் இன்று தொடங்கி வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.
ஜோசப் விஜய் சந்திரசேகர்
இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு வாக்கு சதவீதம் அதிகரித்தபோதே, அது ஆளுங்கட்சிக்கு எதிரான அலையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு முழுமையாக தவெக பக்கம் சாய்ந்துள்ளதை முன்னிலை நிலவரங்கள் உறுதி செய்கின்றன. இன்று சாயங்காலம் இறுதி முடிவுகள் வெளியாகும் போது, தமிழக அரசியலில் ஒரு புதிய சூரிய உதயம் நிகழுமா அல்லது கூட்டணி ஆட்சியா என்பது தெளிவாகத் தெரியும்.












Click it and Unblock the Notifications