ராஜீவ் கொலையை நியாயப்படுத்திய சாட்டை துரைமுருகன்- சீமானையும் கைது செய்யுங்க.. ஜோதிமணி வலியுறுத்தல்
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தி நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் பேசியதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய பேச்சை கண்டிக்காத நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் ஜோதிமணி எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக நேற்று நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சீமான் தலைமை வகித்தார்.

சாட்டை துரைமுருகன் கைது
இந்த ஆர்ப்பாட்டத்தின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதால் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே அந்த கூட்டத்தில் ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தி சாட்டை துரைமுருகன் பேசியிருப்பதும் சர்ச்சையாகி உள்ளது.

ராஜீவ்காந்தி கொலை குறித்து பேச்சு
சாட்டை துரைமுருகன் பேசுகையில், நீ கருணாநிதியையும் அண்ணாதுரையையும் படிச்சு வளர்ந்தவன். நாங்கள் தலைவர் பிரபாகரனை படிச்சு வளர்ந்த பிள்ளைகள். பெரியார், அண்ணா பிள்ளைகளுக்கு பேசத் தெரியும், எழுதத் தெரியும். பிரபாகரன் பிள்ளைக்கு என்ன தெரியும்னு காங்கிரஸ்காரனுக்கு தெரியும். ராகுல்காந்திக்கு தெரியும். சோனியா காந்திக்கு தெரியும். உங்களுக்கு தெரியும்ல.. ஶ்ரீபெரும்புதூர் ஞாபகம் இருக்குதுல்ல.. அவ்வளவுதான்டா என ஶ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தி பேசினார்.

ஜோதிமணி எம்.பி. கண்டனம்
சாட்டை துரைமுருகனின் இந்த பேச்சை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோவுடன் பகிர்ந்துள்ள காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜோதிமணி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நாம் தமிழரின் இந்த பேச்சு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் வரக்கூடிய குற்றம். தமிழகத்தின் அமைதியும்,அப்பாவி இளைஞர்களின் எதிர்காலமும் நாசமாகிவிடும். தமிழ்நாட்டின் அமைதியான எதிர்காலத்தில் ஒருதுளிகூட சமரசம் செய்துகொள்ளக்கூடாது. தமிழக அரசு கடிமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சீமான் ஒரு பாஜக ஆதரவாளர்
சீமான் இந்த மேடையில் இருந்திருக்கிறார். அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே இந்த பயங்கரவாத பேச்சு நடந்திருக்க முடியும். ஆகவே சீமானையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இதற்குமுன்பு 2003ல் இதே சட்டத்தின்கீழ் இப்படி கைது நடந்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் 18 மாதங்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். சீமான் ஒரு பாஜக அடிவருடி. பாஜக இம்மாதிரியான பயங்கரமான குற்றச்செயல்களில் இருந்து தங்களை காப்பாற்றும் என்கிற தைரியத்தில்தான் இப்படி பேசுகிறார்கள். இதற்கு தமிழ்மண்ணில் நாம் இடம் தரக்கூடாது. இவ்வாறு ஜோதிமணி எம்.பி. பதிவிட்டுள்ளார். இதனிடையே சீமான் மீது தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் கோவை போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், ராஜீவ்காந்தியையும் சோனியா காந்தியையும் இழிவுபடுத்தும் வகையில் சீமான் பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications