“ஆல் இந்தியா டூர்”.. ராகுல் வழியில் ஜே.பி.நட்டா! 2024 தேர்தலுக்கு தமிழ்நாட்டில் பாஜக வைக்கும் புள்ளி
சென்னை: 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையிலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையிலும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமையை யாத்திரையை தொடங்கி வெற்றிகரமாக டெல்லிக்கு சென்ற நிலையில், அதே பாணியை பாஜகவும் கையில் எடுப்பதாக தெரிகிறது. நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாட்டில் இன்று தனது பயணத்தை தொடங்குகிறார்.
2024 லோக் சபா தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை பாரதிய ஜனதா கட்சி தொடங்கி உள்ளது.
அந்த வகையில் மேட்டுப்பாளையத்தில் இன்று பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கும் கட்சி முகவர்கள் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

ஆபரேசன் சவுத் இந்தியா
பாஜக செயற்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா ஆபரேசன் சவுத் இந்தியா திட்டத்தை முன்வைத்தார். தென்மாநிலங்களில் பாஜகவுக்கு அதிக எதிர்ப்பு இருக்கும் சூழலில் தமிழ்நாட்டிற்கு அடுத்தடுத்து பிரதமர் நரேந்திர மோடி 2 முறை வந்து சென்றார்.

ஜேபி நட்டா சிவகங்கை பயணம்
அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் கடந்த சில நாட்களுக்கு முன் சிவகங்கை மாவட்டத்துக்கு வந்திருந்தார். இதற்கிடையே காங்கிரஸ் எம்பியும் மூத்த தலைவருமான ராகுல் காந்தியும் ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களை கடந்து மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், அரியானா, டெல்லிக்கு அவர் சென்று இருக்கிறார்.

ராகுல் காந்தி நடைபயணம்
100 நாட்களை கடந்து பல நூறு கிலோ மீட்டர்கள் ராகுல் காந்தி நடந்து சென்ற இந்த ஒற்றுமை யாத்திரையால் அக்கட்சிக்கு பெரும் பயன் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அதே திட்டத்தை பாஜகவும் கையில் எடுத்து இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக தென் இந்தியாவில் பாஜகவின் பலத்தை அதிகரிக்கவும் ஆபரேசன் சவுத் திட்டத்தை மேற்கொள்ளவும் தமிழ்நாட்டில் இருந்து நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செல்கிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.

மேட்டுப்பாளையும் பாஜக பொதுக்கூட்டம்
அந்த வகையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இன்று மாலை நடைபெற உள்ள பா.ஜ.க வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம் மற்றும் பொது கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.க வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகை தந்து இருக்கிறார். இது தொடர்பாக இன்று காலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

நட்டாவின் ஆல் இந்தியா டூர்
அப்போது பேசிய அவர், "பாஜக தேசியத் தலைவர் நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். அதன் முதல் பயணத்தை குறிப்பாக கோவை, நீலகிரியில் இருந்து துவங்க இருக்கிறார்." என்றார். இந்த முகவர்கள் கூட்டத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது, மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது, தேர்தல் பிரச்சாரங்களை எவ்வாறு செய்வது என்பது குறித்தும் ஆலோசனை வழங்க உள்ளார்.












Click it and Unblock the Notifications