தவெகவில் ஒரே ஒரு எம்.எல்.ஏ? நிலைமை என்ன ஆகும்? - சட்டசபையில் சமாளிப்பாரா விஜய்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் பரப்புரையிலேயே 5 நிமிடங்கள்தான் உரையாற்றி வருகிறார். அவர் எப்படி பல கட்சிகளின் ஆதிக்கம் மிக்க சட்டமன்றத்திற்குள் பல மணி நேரம் விவாதம் செய்து தன்னைத் தக்கவைத்துக் கொள்ளப் போகிறார் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.
விஜய் பரப்புரை எந்தளவுக்கு மக்கள் மனத்தை மாற்றியுள்ளது என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் தெரியவரும். ஆனால், அவரது பரப்புரையைவிட, அவர் வருவதாக அறிவிக்கப்பட்ட கூட்டங்கள் திடீர் திடீரென்று ரத்து செய்யப்பட்டதுதான் பெரிய செய்தியாகக் கருதப்படுகிறது.

விஜய்யைவிட வயதில் மூத்தவர்களான மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் பம்பரம்போல் சுற்றிச் சுழன்று தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். விஜய்யோ, பொசுக்கு பொசுக்கு என்று கூட்டத்தை ரத்து செய்கிறார். அதற்கு முன்பு அனுமதி கிடைக்கவில்லை என்ற சாக்குப் போக்குகளை தவெக தரப்பு கூறிவந்தது.
அனுமதி கிடைத்த கூட்டத்திற்கே அவர் வராமல் போகும்போதே பிரச்சனை வேறு எங்கோ இருக்கிறதோ? எனப் பலரும் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் அவர் எத்தனை கூட்டங்களை இதுவரை அனுமதி கிடைத்தும் ரத்து செய்துள்ளார் எனப் பட்டியல் போட்டு பகடி செய்துவருகின்றனர்.
பட்டியல்படி மார்ச் 30 வில்லிவாக்கம் தொகுதி பரப்புரை ரத்து, ஏப்ரல் 6 அன்று தியாகராய நகர் ரத்து, ஏப்ரல் 7 சைதாப்பேட்டை, 11 அன்று நடக்க இருந்த கடலூர் பரப்புரையும் ரத்தானது. ஏப்ரல் 12 கன்னியாகுமரி, 13 கும்மிடிப்பூண்டியும் 14 புதுக்கோட்டையும் ரத்தானது. அப்படி இருந்தும் இந்த ரத்து பட்டியல் முற்றுப் பெறவில்லை. அனுமன் வால் போல் நீண்டுகொண்டே உள்ளது.
தவெக வேட்பாளர்கள் விஜய் தங்களின் தொகுதிக்கு வந்து நமக்காகப் பரப்புரை செய்வார் எனப் பொறுத்திருந்து பார்த்தனர். தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் குறைவான நாட்களே உள்ளன. எனவே விஜய் பொம்மைகளை வைத்து வாக்குக் கேட்டனர். அதற்காக விஜய் பொம்மைகள் பிரச்சார வாகனத்தில் ஜோடிக்கப்பட்டு பரப்புரை நடந்தது. அது பலரும் சமூக ஊடகத்தில் கிண்டலடித்தனர். இறுதியில் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இப்போது கும்பகோணம் தொகுதி வேட்பாளர் வினோத், விஜய் உருவத்தை ஹாலோகிராம் ஏஐ தொழில்நுட்பம் மூலம் தோன்றச் செய்து பிரச்சாரம் செய்து வருவது செய்தியாகியுள்ளது.
எடப்பாடியில் முதல் சறுக்கல்
ஆக, தவெக தலைவர் விஜய் பரப்புரையில் பல சொதப்பல்கள் நிலவி வருகின்றன என்பதே களம் சொல்லும் செய்தியாக உள்ளது. 234 தொகுதியில் தனித்து நிற்பதாக தவெக அறிவித்த நிலையில், வேட்பு மனுத் தாக்கல் சமயம் எடப்பாடி தொகுதி வேட்பாளர் ஆவணங்களை முறையாகச் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி மனுவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதுவே முதல் சொதப்பல் என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் ஆளுமைத் திறனுக்கு இதுவே பின்னடைவுதான் என எடப்பாடி அதிமுகவினர் உற்சாகம் கொள்கிறார்கள்.
விஜய்யின் தவெக தமிழக அரசியல் களத்தில் வலிமையான சக்தியாக உருவெடுக்குமா என்பதைப் பற்றி பலரும் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். விஜய்யின் வெற்றி என்பது விஜயகாந்த்தின் தேமுதிகவை முறியடிக்குமா என்பது அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது. 2006இல் 234 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டு, அதில் விருத்தாசலத்தில் விஜயகாந்த் மட்டுமே வெல்ல முடிந்தது பெரிய சறுக்கலாகக் கருதப்பட்டது. அடுத்த 2011இல் அவர் அதிமுக கூட்டணியுடன் 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியான திமுகவையே பின்னுக்குத் தள்ளினார் என்பதும் சாதனைதான்.
விஜய் மட்டும் வெற்றி பெற்றால்
அதேபோல் விஜய் இந்த 2026இல் பெரம்பூர் தொகுதியில் வெல்வதற்காக வாய்ப்புகள் உள்ளதாகப் பலரும் கணித்துள்ளனர். கட்சி 20% வாக்குகளைப் பெறும் என்று களம் கூறுவதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை விஜய் மட்டுமே வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் சென்றால், அவரது நிலை என்ன ஆகும்? அவர் விஜயகாந்த் போல் சமாளிப்பாரா?
ஏனெனில், தைரியமான மனிதராகக் கருதப்பட்ட விஜயகாந்த்தே 2011இல் சட்டசபைக்கு ஜெயலலிதாவின் அரசியல் ஆளுமைக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அப்படித் தனித்து சட்டசபைக்குள் போகும் சூழல் விஜய்க்குக் கிடைக்குமானால், அவர் பல பிரச்சனைகளுக்கு உடனடியாக எழுத்து மறுப்பு தெரிவிப்பாரா?
கட்சி ஆரம்பித்ததிலிருந்து ஒருமுறைகூட செய்தியாளர்களைச் சந்திக்க முன்வராதவர், சட்டசபை சட்டவிதிகளைக் கற்றுக் கொண்டு அதற்கு ஏற்ப தனித்து நின்று சமாளிப்பாரா? வெறுமனே பரப்புரையில் பேசும் 'திமுக என்பது தீய சக்தி' என நான்கு பஞ்ச் டயலாக் அனுபவம் அவருக்குச் சட்டசபைக்குள் கைகொடுக்குமா? எனப் பல கேள்விகள் எழுகின்றன.
ஒருவேளை 1989இல் ஜெயலலிதாவுக்குச் சட்டசபைக்குள் நடந்த நெருக்கடி போல், விஜய்க்கு ஒரு நிலை உருவானால் அவர் அதை எதிர்கொண்டு தனித்து நின்று போராடுவாரா? 75 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை, தலைவர்களைக் குறுக்கிட்டு வாதம் செய்து வெற்றி பெறுவாரா? அல்லது தனி ஒரு ஆளாக அவர் வெற்றிபெற்றால், சட்டசபைக்குச் சென்று கையெழுத்துப் போட்டுவிட்டு 5 ஆண்டுகளை அப்படியே கடத்திவிடுவாரா?
தனித்து வேட்டையாட ரெடியா?
சட்டசபைக்குள் பண்ருட்டி வேல்முருகன் தனி சட்டமன்ற உறுப்பினராக நின்று ஆளும் கட்சியை எதிர்த்து குரல் எழுப்பிப் போராடுகிறார். அவரையே ஆளும் கட்சி பல நேரங்களில் 'ஆஃப்' செய்துவிடுகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தத் தேர்தலில் அவருக்கு திமுக கூட்டணியில் சீட்டு வழங்கவே முன்வரவில்லை. அவர் தனித்துவிடப்பட்டார்.
பல ஆண்டுகள் சட்டமன்ற அனுபவம் பெற்ற வேல்முருகனே சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார். விஜய்யால் என்ன செய்ய முடியும் எனச் சிலர் கேட்கிறார்கள். அந்தச் சந்தேகத்தை லேசாகப் புறக்கணிக்க முடியாது.
சில நேரம் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினராகச் சட்டசபைக்கு உள்ளிருப்பு போராட்டம் கூட நடத்த வேண்டிய சூழல் வரலாம். தவெகவின் தலைவர் விஜய்யின் போராட்ட குணம் தான் அவரை சட்டசபைக்கு ஒரு தலைவராகக் கட்டமைக்கும். அதற்கு உண்டான தைரியமும் பக்குவமும் அவரிடம் உள்ளதா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
ஒருவேளை ஆளும் கட்சியாக அதிமுக அல்லது திமுக எது வந்தாலும் சபாநாயகரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி விஜய்யின் செயல்பாட்டை முடக்கப் பல திட்டங்களைத் தீட்டும். அதை எப்படி இவர் தனியாகச் சமாளிப்பார்?
இவ்வளவு நெருக்கடியான புலிகளின் குகைக்குள் ஒரு மான்குட்டியைப் போல மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கும் விஜய்யால் எப்படி எதிர்கொள்ள முடியும்? ஆகவே, முன்பு அவர் வெற்றியைப் பற்றி பலரும் பேசி வந்தனர். இப்போது விவகாரம் அவர் வெற்றி பெற்றால் என்ன ஆகும் எந்த அடுத்த கட்டத்திற்குப் போய் நிற்கிறது. என்ன செய்வார் விஜய்?
எழுதியவர்: கடற்கரய்












Click it and Unblock the Notifications