கவுன்டவுன் ஸ்டார்ட்ஸ்.. வேட்புமனுவிற்கு 2 நாள் இருக்கு.. என்ன செய்ய போகின்றன கட்சிகள்
சென்னை : தமிழக உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. மார்ச் 27 ம் தேதி துவங்கி, ஏப்ரல் 29 ம் தேதி வரை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாகவும், அசாமில் 3 கட்டங்களாகவும், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தலுக்கான பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இன்னும் 2 நாள் தான் இருக்கு
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் மார்ச் 12 ம் தேதி துவங்க உள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் 19 ம் தேதியுடன் நிறைவடைகிறது. மார்ச் 20 ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, மார்ச் 22 ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

தமிழக கட்சிகளின் நிலை
வேட்புமனு தாக்கல் துவங்க இன்னும் 2 நாட்களே உள்ளது. ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் பலவும் இதுவரை கூட்டணியையே முடிவு செய்யாமல் உள்ளன. பல நாட்களாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தாலும் சில கட்சிகளுடன் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. 9 கட்சிகளை கூட்டணியில் இணைத்து, தொகுதிகளை பிரித்து கொடுத்த பிறகும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சை தொடர்ந்து வருகிறது.

இழுபறியில் அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக மட்டுமே இணைந்துள்ளன. தேமுதிக - அதிமுக இடையேயான தொகுதி பங்கீடு இதுவரை முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதே நிலை தான் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் இடையேயான கூட்டணி பேச்சும் முடிவுக்கு வரவில்லை.

6 பேர் மட்டுமே அறிவிப்பு
வேட்புமனு தாக்கல் துவங்கும் மார்ச் 12 ம் தேதி வேட்பாளர் இறுதி பட்டியலை வெளியிட அதிமுக, திமுக கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் எத்தனை தொகுதிகளில் போட்டியிட போகிறோம் என்பதை முடிவு செய்வதற்கு முன்பே 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

கமல் என்ன செய்கிறார்
தேர்தல் அறிக்கையை முதல் ஆளாக வெளியிட்டு விட்டு, கூட்டணி, தொகுதி பங்கீடு வேலைகளையும் முடித்து விட்டு தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல். 154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள கமல், வேட்பாளர் பட்டியலை எப்போது வெளியிட போகிறார் என்பது தெரியவில்லை.

முதல் ஆளாக களமிறங்கிய சீமான்
யாருடனும் கூட்டணி வைக்காமல் 234 தொகுதிகளிலும் தனியாக களமிறங்கி உள்ளார் நாம் தமிழர் கட்சி சீமான். தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து விட்டு, தீவிர பிரசாரத்திலும் இறங்கி விட்டார் சீமான்.












Click it and Unblock the Notifications