"மைக் வைச்சுட்டு.. சும்மா 4 ரீல்ஸ் போட்டால் தலைவனா நீ?" அண்ணாமலை அட்டாக்.. யாரை சொல்கிறார்?
சென்னை: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அண்ணாமலை, இன்று வருவோர் போவோர் எல்லாம் தலைவர் ஆகிவிடுகின்றனர் என்று பேசினார். மேலும், தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள் என்றும் சித்தாந்தம் அடிப்படையில் வாக்களிக்கும் முறை மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்து பவுண்டேசன் அமைப்பு சார்பில் சென்னை உத்தண்டியில் உள்ள சுத்தானந்தா ஆசிரமத்தில் அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலத் தலைவருமான அண்ணாமலை கலந்துகொண்டார். இந்தப் பயிலரங்கில் பேசிய அண்ணாமலை, தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் பெரும்பாலான மக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கலாம் என்பதை முடிவு செய்வதாகவும் இதனால் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மைக் வைத்திருந்தால் தலைவனா நீ
அவர் மேலும் பேசுகையில், "இன்று வருவோர் போவோர் எல்லாம் தலைவர் ஆகிவிடுகின்றனர். கையில் மைக்கை பிடித்துக் கொண்டு, வெள்ளைச் சட்டை போட்டு 4 ரீல்ஸ் போட்டால் தலைவன் ஆகிவிடுகிறார்கள். இதே தமிழகத்தில் தான் காமராஜர், கக்கன் போன்றவர்கள் தலைவர்களாக இருந்தனர். உண்மையில் ஒரு நல்ல அரசியல் தலைவராக வர 2 தகுதிகள் முக்கியம்
முதலில் சமூகம் உங்களுக்கு ஒரு பார்வை இருக்க வேண்டும். வைக்கும். நீங்கள் மனிதநேயம் மிக்கவராக இருக்க வேண்டும். சாதி, மதம், சித்தாந்தத்தைக் கடந்து வெளியில் வர வேண்டும். அதன் பிறகே மக்கள் உங்களை அரசியல் தலைவராக ஏற்பார்கள்.
பதவி எதிர்பார்ப்பு கூடாது
மகாத்மா காந்தி 29 ஆண்டுகள் எந்தப் பதவியிலும் இல்லை.. ஒரே ஒரு வருடம் காங்கிரஸ் தலைவராக இருந்தார். மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் மாற்றத்தை முதலில் நீங்கள் உங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும். உண்மையில் நீங்கள் அமரும் சீட் உங்கள் அதிகாரத்தைத் தீர்மானிக்காது. உங்கள் செயல்பாடே தீர்மானிக்கும். எப்போதும் பதவியை எதிர்பார்க்காமல் கட்சியில் சேர வேண்டும்.. பதவி வரும் போகும்.. எந்தப் பதவியாக இருந்தாலும் ஒருநாள் இல்லாமல் போகும்.. அதுதான் இயல்பு. தகுதி, திறமையை வளர்த்துக் கொண்டே இருங்கள்.. உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவிகள் தானாகவே வந்து சேரும்.
பழிவாங்கக் கூடாது
அதிகாரத்திற்கு வந்தபிறகே தன்னை அவமதித்தவர்களைக் கூட பழிவாங்கும் எண்ணம் இல்லாமல் யார் இருக்கிறாரோ அவரே சிறந்த தலைவராக வருவார் என்று மோடி கூறியுள்ளார். ஒரு முறை பழிவாங்கத் தொடங்கினால் அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதிகாரத்திற்கு வந்த பிறகு அவமதித்தவர்களின் செல்போனை ஒட்டுக்கேட்பது, பழிவாங்குவது, ரெய்டு அனுப்புவது ஆகியவற்றைச் செய்யவே கூடாது. ஒரு அரசியல்வாதிக்குப் பழிவாங்கும் போக்கு இருக்கலாம்.. ஆனால், ஒரு தலைவனுக்கு அது இருக்கவே கூடாது" என்றார்.
தமிழ்நாடு வாக்காளர்கள்
தொடர்ந்து தேர்தல் அரசியல் குறித்துப் பேசிய அவர், "தமிழகத்தில் 40 சதவீத மக்கள் வாக்குப்பதிவுக்கு ஒரு வாரம் இருக்கும்போது தான் யாருக்கு வாக்களிக்கலாம் என்பதையே தேர்வு செய்கிறார்கள். அரசியல் சித்தாந்தத்தைப் பார்த்து வாக்களிக்கும் நிலை எல்லாம் மாறிவிட்டது. எனவே, கட்சி அலுவலகங்களில் மட்டும் இருந்துவிடாமல் மக்களிடம் சென்று பணியாற்ற வேண்டும்.
இங்குத் தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் மாடுகளை நிற்க வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார்.. மாடுகளுக்கு வாக்குரிமை வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார். திடீரென மரம் ஏறிக் கொண்டிருக்கிறார். அவர் செய்வது சரி, தவறு என்று கூறவில்லை. ஆனால் மக்களை இப்படி எல்லாம் செய்து வருகிறார் என்பதே உண்மை" என்றார்.












Click it and Unblock the Notifications