பறிப்போன அமைச்சர் பதவி.. கே ராமச்சந்திரனை தேடிப்போன புதிய பொறுப்பு.. அரசு தலைமை கொறடாவாக நியமனம்
சென்னை: தமிழக அமைச்சரை மாற்றத்தின்போது சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியை இழந்த குன்னூர் தொகுதி எம்எல்ஏவான கே ராமசந்திரனுக்கு முதல்வர் ஸ்டாலின் புதிய பொறுப்பை வழங்கி உள்ளார். அதன்படி கே ராமச்சந்திரன் அரசின் தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து புதிதாக பதவியேற்றவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன்படி செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி எம்எல்ஏவான கோவி செழியனுக்கு உயர்கல்வித்துறையும், சேலம் வடக்கு எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், ஆவடி நாசருக்கு சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சர் கே ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் கே ராமச்சந்திரனுக்கு உடனடியாக புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் அரசின் தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதன்மை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛‛கா ராமசந்திரன், குன்னூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அரசு தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அரசின் தலைமை கொறடாவாக திருவிடைமருதூர் சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏ கோவி செழியன் செயல்பட்டு வந்தார். தற்போது அவர் உயர்கல்வித்துறை அமைச்சராகி உள்ளார். அவர் வகித்து வந்த பொறுப்பு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள குன்னூர் திமுக எம்எல்ஏ கே ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அரசு கொறடா என்பதும் அமைச்சருக்கு நிகரான பணியாகும். அமைச்சரவை போல் வாகனம், தனி அறை உள்ளிட்ட சலுகைகள் அரசு கொறடாவுக்கும் வழங்கப்படும். அரசு தீர்மானத்தின்போது பேசுவதற்கும், மானிய கோரிக்கை மீது பேசுவதற்கும் எம்எல்ஏக்களை அனுமதிப்பது, அதை பேரவைத் தலைவருக்கு தெரிவிப்பது கொறடாவின் பணியாகும்.
சட்டசபையில் ஒவ்வொரு கட்சிக்கும் கொறடா என்பவர் நியமிக்கப்பட்டு இருப்பார். இந்த கொறடா உத்தரவுகளை தான் சட்டசபையில் உள்ள அந்தந்த கட்சி எம்எல்ஏக்கள் பின்பற்ற வேண்டும். கொறடா உத்தரவை மீறி சட்டசபைக்கு வராமல் இருப்பது, கொறடா உத்தரவை மீறி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்கெடுத்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான பரிந்துரையை கொறடாவால் சபாநாயகருக்கு வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications