ஜெயலலிதா ஒரு பெண்ணாக இருந்தும்கூட.. வாச்சாத்தி கொடூரத்திற்கு பின் நடந்தது என்ன? கி.வீரமணி பரபர
சென்னை: வாச்சாத்தியில் வேலியே பயிரை மேய்வதைபோல் போலீசும், வனத்துறையும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது கண்டிக்கத்தக்கது என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "வாச்சாத்தியில் காவல்துறை - வனத்துறை அலுவலர்களே பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது கண்டிக்கத்தக்கது. அன்றைய அ.தி.மு.க. அரசு குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது வருந்தத்தக்கது. இழப்பீடும், நிவாரணமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பது பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் குறைக்காது.

எனினும் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இது தவிர்க்க இயலாது. சி.பி.ஐ.க்கும், நீதிபதிக்கும் நமது பாராட்டுகள். வேலியே பயிரை மேயும் இந்தக் கொடுமைக்கு வாச்சாத்தியே கடைசியாக இருக்கவேண்டும். மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வோம்!
தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரிகளால் 18 இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (29.9.2023) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், சுய தொழில் செய்ய உதவி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார். வழக்கில் தொடர்புடைய பெண்கள் இறந்து போயிருந்தால் அவர்களது குடும்பத்திற்கு இந்த உதவிகளை செய்ய வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இந்த கொடூரச் சம்பவம் நடந்தபோது அப்போதைய மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாச்சாத்தியில் நடந்தது என்ன?: முன்னதாகக் குற்றம் சாட்டப்பட்ட 279 பேரில் உயிருடன் இருந்த 215 பேர் குற்றவாளிகள் என, கடந்த 2011 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதில் 12 பேருக்கு 10 ஆண்டு சிறையும், 5 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், மற்றவர்களுக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
என்ன நடந்தது வாச்சாத்தி கிராமத்தில்?: 1992 ஆம் ஆண்டு 'சந்தன மரக் கடத்தல்காரன்' என்று கூறப்பட்ட வீரப்பன் நடமாடி வந்த தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாகத் தகவல் அறிந்து, தமிழ்நாடு அரசு வனத்துறையினர், காவல்துறை மற்றும் வருவாய்துறை உதவியுடன் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தி கிராமத்தைச் சுற்றி வளைத்து பல மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த 133 பேரை கைது செய்தனர். அதில் 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள் அடங்குவர். ஆனால், கைது செய்யப்பட்ட அப்பாவி கிராம மக்கள் சந்தன கட்டைக் கடத்தலுக்கும், தங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணை நடைபெற்ற நேரத்தில் வாச்சாத்தியைச் சேர்ந்த 18 பெண்களை வனத்துறை மற்றும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்ட நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. குற்றச்சாட்டை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா மறுத்தார்!
ஒரு பெண்ணாக இருந்தும்கூட இந்தக் குற்றச்சாட்டை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்தார். ஆனால், 1992 ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி இந்நிகழ்வு குறித்து முறையான புகார் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு காவல்துறை இந்த புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தவில்லை என வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து சி.பி.அய். வழக்கை விசாரித்து 4 ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள், வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய் துறையினர் உள்பட 269 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால், இப்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. 30 ஆண்டுகால போராட்டத்திற்குக் கிடைத்த முக்கியத்துவம் வாய்ந்த நீதியாக இது பார்க்கப்படுகிறது.
உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!: இந்த வழக்கில் பாராட்டப்படவேண்டிய நீதிபதி வேல்முருகன் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: "பாதிக்கப்பட்ட பெண்களின் வலியை பணத்தினாலோ, வேலைவாய்ப்பு வழங்குவதாலோ ஈடுகட்ட முடியாது. சந்தன மரக்கட்டைகளைத் தேட 18 பெண்களை அழைத்துச் சென்றபோது, பெண் காவலர் யாரும் அழைத்துச் செல்லப்படவில்லை.
13 வயது சிறுமி, 8 மாத கர்ப்பிணி உள்ளிட்டோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கின்றனர். காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகளின் மிரட்டல் காரணமாகவே 18 பெண்களும் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை நீதிபதியிடம் கூடக் கூறவில்லை.
உண்மைக் குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும்...: வாச்சாத்தி பகுதியில் சில முக்கிய நபர்கள் (''மாஃபியா'') சந்தன மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட நிலையில், அப்பாவி கிராம மக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு எதிராகப் பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வனத்துறையினர் எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. உண்மை குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அன்றைய அரசு அக்கறை காட்டவில்லை. சந்தனமர கடத்தல்காரர்களைக் காப்பாற்றும் நோக்கில் வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.
பழங்குடியினப் பெண்களைக் காப்பாற்ற அப்போதைய அரசு அக்கறை காட்டவில்லை. தவறிழைத்த அதிகாரிகளை பாதுகாக்கவே முயன்றது.
சி.பி.அய். தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீட்டு வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன." இவ்வாறு நீதிபதி வேல்முருகன் வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலியே பயிரை மேய்வதா?: உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு பெரிதும் வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும். ''வேலியே பயிரை மேய்ந்தது'' என்று சொல்லுவதுபோல, காவல்துறையினரும், வனத்துறை அதிகாரிகளும் பெண்களை வன்கொடுமை செய்த கொடூரம் எந்த வகையிலும் மன்னிக்கப்படவோ, சமரசம் செய்யப்படவோ முடியாத ஒன்று.
பெண்கள் என்றால் போகப் பொருள் என்று கருதும் மனித மிருகங்களுக்கு எந்த உச்சப்பட்ச தண்டனையை அளித்தாலும், அது சரியானதே! நட்ட ஈடு அளித்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரம் ஆக முடியாது; என்றாலும், எல்லாம் முடிந்துவிட்ட பிறகு நட்ட ஈடு வழங்குவது ஒருவகையில் நிவாரணம், ஆறுதலுக்கானது என்றே கூறவேண்டும்.
மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் முக்கியம்!: வாச்சாத்தி வன்கொடுமையே கடைசியானதாக இருக்கவேண்டும். பழங்குடி மக்கள் என்றால், கிள்ளுக்கீரை என்று கருதும் கயமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். விசாரணையை சரிவர நடத்திய சி.பி.ஐ.க்கும், வழிகாட்டும் தீர்ப்பை வழங்கிய நீதித்துறைக்கும் நமது உளம் நிறைந்த பாராட்டுகள்.
வாச்சாத்தி நிகழ்வு குறித்த தகவல்களை நாடு முழுவதும் பரப்பி, மக்கள் மத்தியில் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் தேவை! நம்முடைய கழகக் கூட்டங்களில் இது முக்கியமாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பழங்குடி மக்கள் நம் மக்கள் என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்படுத்துவதே மனிதநேயம்!" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications