40,000 பேருக்கு ஆர்டர் வந்தாச்சு! “கலைஞர் கனவு இல்லம்!” தீரும் ஏழை மக்களின் ஏக்கம்! சூப்பர் அப்டேட்
சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 40,000 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றும் மீதமுள்ள பயனாளிகளுக்கு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் ஆணைகள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சூப்பரான தகவலை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

'கலைஞரின் கனவு இல்லம்' திட்டம் தொடர்பான அறிவிப்பை தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியிட்டார். தமிழகத்தில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக கான்கிரீட் கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இத்திட்டத்தின் நோக்கம்.
அறிவிப்பை தொடர்ந்து, இதற்கான அரசாணையை ஊரக வளர்ச்சி துறை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அதில், பயனாளிகளுக்கான தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகின. தொடர்ந்து, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், இந்த 2024-25 ஆம் நிதி ஆண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் என்ற அளவில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகள் அனைத்தும் 360 சதுரஅடி அளவில் சமையலறையுடன் இருக்க வேண்டும். இதில் 300 சதுரஅடி கான்கிரீட் (ஆர்சிசி) கூரையுடனும், எஞ்சிய 60 சதுரஅடிக்கு தீப்பிடிக்காத பொருளில் அமைக்கப்பட்ட கூரையாக, பயனாளிகளின் விருப்பத்துக்கேற்ப அமைக்க வேண்டும் என்பது விதிமுறை.
சொந்தமாக பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட தகுதியானவர்கள். புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டிருப்பவர்கள் இதில் வீடு கட்ட முடியாது. சொந்தமாக கான்கிரீட் வீடு இருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற முடியாது.
பயனாளிகளுக்கான தொகை அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கப்படும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் படி ஒவ்வொரு வீட்டிற்கும் ஒதுக்கீட்டு தொகை ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். அதில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை நிதியாகவும், மீதம் 40 ஆயிரத்திற்கு கட்டுமான பொருட்களாகவும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளது.
இந்த நிலையில் தான் கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள் தேர்வை ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. பயனாளிகள் பட்டியல் கிராம சபை கூட்டத்தில் வைத்து ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் மூலம் 40,000 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். மீதமுள்ள பயனாளிகளுக்கு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் ஆணைகள் வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications