மீண்டும் வடசென்னை தொகுதிக்கு குறி! தொண்டர்களோடு கேசுவலாக டீ -வடை! கலாநிதி வீராசாமி போடும் அஸ்திவாரம்
சென்னை: வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் 2வது முறையாக களமிறங்க காய் நகர்த்தி வரும் கலாநிதி வீராசாமி, இப்போதே தேர்தல் பணிகளுக்கான அஸ்திவாரத்தை போட ஆரம்பித்துவிட்டார்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் மீண்டும் சீட் கேட்கும் திட்டத்தில் உள்ள சிட்டிங் எம்.பி.க்கள் பலரும் மிகவும் சின்சியராக தொகுதியை வலம் வர ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில் வடசென்னை தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, வடசென்னை தொகுதியை மீண்டும் கேட்பார் எனத் தெரிகிறது.

இதனால் தான் என்னவோ தெரியவில்லை, வடசென்னை தொகுதி திமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அவர் குஷி படுத்தி வருகிறார். மாலை நேரங்களில் கட்சி தொண்டர்களோடு தொண்டராக மிகவும் கேசுவலாக சாலையோர தேநீர் கடைகளில் டீ, வடை சாப்பிடுவது அப்படியே தேர்தல் பணிகள் பற்றியும் பேசுவது என இப்போதே ஃபவுண்டேஷனை ஸ்ட்ராங் ஆக்கி வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் கூட வட சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6,000 திமுகவினருக்கு ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி புத்தாடைகளும், தலைக்கவசமும் வாங்கிக் கொடுத்திருந்தார் கலாநிதி வீராசாமி எம்.பி. அதேபோல் தனது பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட செயலியின் மூலம் பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருந்து வருகிறார்.

கலாநிதி வீராசாமியின் நாடாளுமன்ற செயல்பாடுகளை பொறுத்தவரை பெரியளவில் குறை கூற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டத் தொடர்களில் முழுமையாக பங்கேற்பது, முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை எழுப்புவது, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்து மத்திய அமைச்சர்களுக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதுவது என தனது பணியை யாரும் குறை சொல்லாத வகையில் கவனித்து கொள்கிறார்.
அதேபோல் ஸ்டாலின் குட்புக்கிலும் இடம் பிடித்திருக்கிறார். இதனால் மீண்டும் இவருக்கு வடசென்னை தொகுதி கிடைப்பதில் பெரிதாக எந்த சிக்கலும் இருக்காது எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications