ஆன்லைனில் களரி வகுப்பு.. திடீரென மயங்கி விழுந்து மாஸ்டர் பலி.. சென்னையில் சோகம்!
சென்னை: சென்னையை அடுத்த மதுரவாயலில் ஆன்லைனில் களரி வகுப்பு எடுக்கும் போது மயங்கி விழுந்த களரி மாஸ்டர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கிரிதரன்(29), மதுரவாயல், ஆலப்பாக்கம் பகுதியில் களரி பயிற்சி மையம் வைத்து நடத்தி வந்தார். தனியார் யூடியூப் சேனலில் இவர் குறித்த செய்தி வெளியிடுவதற்காக பணிகள் நடந்து வந்தன.
இதற்காக நேற்று மாணவர்களுக்கு ஆன்லைனில் களரி பயிற்சி கொடுத்து வந்த போது திடீரென வாந்தி எடுத்தபடி மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள்
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இறந்து போன கிரிதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

மாரடைப்பு
இதில் முதல் கட்டமாக மாரடைப்பால் இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக கிரிதரன் தீவிரமாக உடற்பயிற்சிகளை செய்து வந்ததாக அவரது உதவியாளர்கள் தெரிவிக்கிறார்கள். சிறிதும் ஓய்வின்றி உடற்பயிற்சி, களரி வகுப்புகள் ஆகியவற்றை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி என்றால் சாதாரணமானவை அல்ல, மிகக் கடினமான உடற்பயிற்சிகளை செய்திருந்தாராம். இதனால் ரத்த ஓட்டம் வேகமாகி அதனால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. பொதுவாக ஒரே நேரத்தில் கடினமான உடற்பயிற்சிகளை செய்யக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரும் கடந்த ஆண்டு உடற்பயிற்சி கூடத்தில் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்ட போது மயங்கி விழுந்து பலியானார். இது போல் உடற்பயிற்சி கூடங்களில் இது போன்று உடற்பயிற்சியின் போது மயங்கி விழுந்து இறக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications