கலாஷேத்ராவில் நடந்தது என்ன..நேரில் ஆஜரான இயக்குநர்..மாநில மகளிர் ஆணையம் அரசுக்கு அறிக்கை தாக்கல்
சென்னை: கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் வன் கொடுமை நிகழ்ந்ததாக எழுந்த புகாரின் பேரில் பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மாநில மகளிர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். கலாஷேத்ராவில் மாணவிகளிடம் விசாரணை நடத்திய மாநில மகளிர் ஆணைய தலைவி தனது அறிக்கையை இன்று சமர்பித்தார்.
திருவான்மியூரில் உள்ள கலாக்ஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கல்லூரி வளாகத்தில் மாணவ - மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி தனது தோழியுடன் நேற்று மாலை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பேராசிரியர் ஹரிபத்மன் மீது புகார் அளித்தார்.
படிக்கும் காலத்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து மகளிர் போலீசார், உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணின் மாண்பிற்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ஹரிபத்மன், கலாஷேத்ரா கல்லூரியில் கேரள மாணவியை போன்று எத்தனை பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்? என்பது பற்றிய விவரங்களை காவல்துறையினர் சேகரித்தனர்.

ஹரி பத்மன் கைது
குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் ஹைதராபாத்தில் அரங்கேற்றம் நிகழ்ச்சியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரை சென்னைக்கு வரவழைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்ட நிலையில் ஹரிபத்மன் தலைமறைவானார். கல்லூரிக்கு நேரில் சென்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கேரளா சென்ற தனிப்படை போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

முதல்வர் ஸ்டாலின்
கலாஷேத்ரா விவகாரம் தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்படி போலீசாரும் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதன்மூலம் கலாஷேத்ரா பாலியல் விவகாரத்தில் பேராசிரியர் ஹரிபத்மன் மீது எந்த நேரத்திலும் கைது நடவடிக்கை பாயலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மகளிர் ஆணையம் விசாரணை
தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி, கலாஷேத்ரா கல்லூரியில் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு பேராசிரியர் உள்பட 4 பேர் மீது மாணவிகள் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. நூற்றுக்கணக்கான மாணவிகள் புகார் அளித்தனர்.

இயக்குநர் ஆஜராக உத்தரவு
இதனையடுத்து கலாசேத்ரா கல்லூரியின் இயக்குனர் ரேவதி ராமசந்திரன் மற்றும் துணை இயக்குனர் பத்மாவதி ஆகியோரை இன்றைய தினம் ஏப்ரல் 3ஆம் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராக மாநில மகளிர் ஆணையம் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் ஹைதராபாத்தில் பேராசிரியர் ஹரிபத்மனை காவல்துறையினர் கைது செய்தனர்.

நேரில் ஆஜரான இயக்குநர்
மகளிர் ஆணையத்தின் உத்தரவின் பேரில் இன்று காலையில் மகளிர் ஆணையத்தின் முன் கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் நேரில் ஆஜரானார். அவரிடம் பேராசிரியர் பாலியல் தொல்லை தொடர்பாக எத்தனை மாணவிகள் புகார் அளித்துள்ளனர். புகாரின் மீது என்ன நடவடிக்கை பாலியலை தடுக்கும் கமிட்டி விசாரணை கமிட்டி விசாரணை நடத்தியது என பல விவரங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான பேராசிரியர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கக் கூடாது என மகளிர் ஆணைய தலைவி குமாரி கூறியுள்ளார்.

ஆவணங்களை அளித்த இயக்குநர்
ஒரு மணி நேரம் நீடித்த விசாரணையில் மாணவிகள் அளித்த புகார் குறித்த ஆவணங்களை மகளிர் ஆணையத்தில் அளித்ததாக இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் தெரிவித்தார். இதனிடையே கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் செல்போனை சைபர் கிரைம் ஆய்வகத்திற்கு அனுப்ப காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். எத்தனை மாணவிகளுக்கு ஹரி பத்மன் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். எத்தனை மாணவிகளுடன் செல்போனில் ஹரி பத்மன் பேசியுள்ளார் என விசாரித்த காவல்துறையினர் செல்போனில் ஏதேனும் அழிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய சைபர் ஆய்வகத்துக்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மகளிர் ஆணையம் அறிக்கை
மகளிர் ஆணையம் அறிக்கை இதனிடையே ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலாஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நான்கு பேராசிரியர்களையும் டிஸ்மிஸ் செய்து கலாஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் இன்று மாலை தலைமைச் செயலாளரை சந்தித்து அறிக்கையை அளிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி இன்று இரவு 7 மணிக்கு மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்புவை சந்தித்து அறிக்கையை சமர்பித்தார். இந்த அறிக்கை 200 பக்கங்கள் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அறிக்கையில் கலாஷேத்ராவில் நடந்த விஷயங்கள் மாணவிகள், நிர்வாகிகள் அளித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மாநில அரசு சார்பில் எடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications