கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் வைக்கோல், கட்டம், பொம்மை, முட்டை, எலுமிச்சை! விழித்த உளுந்தூர்பேட்டை
சென்னை: கச்சிராயப்பாளையம் அருகே தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற இருந்த படையல் திருவிழாவை தடுத்து நிறுத்தி திருவிழாவில் பங்கேற்க இருந்த 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, கள்ளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. அதேபோல அரசுப்பள்ளி ஒன்றின் வளாகத்தில் அசம்பாவிதத்தில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த இரு சம்பவமும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் நடந்து, பெரும் பரபரப்பை தந்து வருகிறது.. என்ன நடந்தது?
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது நாட்டார்மங்கலம் கிராமம்.. இந்த கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கள் படையல் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்த பகுதியில் கள் படையல் திருவிழா நடத்த கூடாது என போலீசார் எச்சரித்திருந்தனர்.. அத்துடன், முன்னெச்சரிக்கையாக 6 பேரை கைது செய்திருந்தனர்..

கள் - வெற்றிலை பழம் வழிபாடு
எனினும், கச்சிராயபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தென்னை மரத்தில் கள் இறக்க அனுமதி வேண்டி வெற்றிலை பழம் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.. தொடர்ந்து படையல் வைப்பதற்காக கள் கொண்டு வரப்பட்டதை அறிந்த கச்சிராயப்பாளையம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடமிருந்த கள்ளை பிடுங்க முயன்றனர்.
ஆனால், அங்கிருந்த பெண்களும், ஆண்களும் சேர்ந்து கள்ளை பிடுங்க விடாமல் தடுத்தனர்... இதனால் போலீசாருக்கும், கள் படையல் செய்ய வந்தவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த 40 பேரையுமே போலீசார் அதிரடியாக கைது செய்ததால் பரபரப்பு நிலவியது..
குண்ணத்தூர் அரசு பள்ளி
நேற்றைய தினம், கள் இறக்க அனுமதி வேண்டி வெத்தலை பழம் வைத்து நடத்தப்பட்ட வழிபாட்டால் சின்னசேலத்தில் நிலவிய இதே சலசலப்பு போல, உளுந்தூர்போட்டையிலும் பூஜை சலசலப்பு நடந்துள்ளது.
அதாவது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எம். குண்ணத்தூர் கிராமம் உள்ளது.. இங்கு செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் குண்ணத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்..

சக்கரம் மந்திர கட்டம்
கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால், மறுநாள் மாணவர்கள் பள்ளியில் நுழைந்தனர்.. அப்போதுதான், பள்ளிக்கூட கேட்டின் பூட்டில், மஞ்சளும், குங்குமமும் பூசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. பிறகு பள்ளிக்குள் தலைமை ஆசிரியர் ரூமுக்கு அருகே, சக்கரம் போல் மந்திர கட்டம் வரையப்பட்டிருந்தது. அதில் முட்டை வைத்து எலுமிச்சம்பழத்தை அறுத்து, அந்த பழத்துக்கும் மஞ்சள் குங்குமம் பூசப்பட்டிருந்தது..
இதனை தவிர, வைக்கோலால் செய்யப்பட்ட பொம்மை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.. இவை அனைத்தையும் பார்ப்பதற்கு மாந்திரீக பூஜை செய்ததை போலவே இருந்ததால், ஒட்டுமொத்த பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் கதிகலங்கி போனார்கள்.. சில மாணவர்கள் பயத்தில் வீட்டுக்கே திரும்பி சென்றுவிட்டனர்..

ஒதுக்குப்புறத்தில் பூஜை
ஆனால், இதனை யார் செய்தார்கள்? எதற்காக செய்தார்கள் என்று தெரியவில்லை.. ஒருவேளை இன்ஸ்டா ரீல் மோகம் கொண்டவர்கள், பள்ளி மாணவ மாணவியரை பயமுறுத்துவதற்காகவே இப்படி செய்தார்களா? அல்லது உள்ளூர்க்காரர்கள் யாராவது செய்தார்களா? அல்லது மதுபோதையில் இளைஞர்கள் செய்தார்களா? என்றும் தெரியவில்லை..
ஆனால், இந்த பள்ளி ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிறதாம்.. கட்டம் கட்டி மாந்திரீகம் செய்வது இது முதல்முறையும் கிடையாதாம்.. இதற்கு முன்புகூட, பூஜை அசம்பாவிதங்கள் நடந்துள்ளதாக சொல்கிறார்கள்.. எனினும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. இந்த சம்பவத்தினால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications