மாவட்ட ஆட்சியரே தவறான தகவலை சொன்னால் எப்படி உண்மை வரும்.. சிபிஐ விசாரணை வேண்டும்.. எடப்பாடி
சென்னை: மாவட்ட ஆட்சியரே ஒரு பொய்யான தகவலை சொன்னால் எப்படி ஒரு நபர் ஆணையத்தில் மட்டும் உண்மை கிடைக்கும். ஏழை மக்களுக்கு உண்மை விவரம் தெரிய வர வேண்டும் என்றால் கள்ளக்குறிச்சி சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழக சட்டசபை இன்று 3வது நாளாக கூடியது. இன்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது. ஆனால் கள்ளக்குறிச்சி சாராய விவகாரம் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.

இன்றைய அவை கூடியதுமே கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி பேச அனுமதிக்க வேண்டும் என்று தொடர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் அப்பாவு, நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது. எதையும் பேச வேண்டிய நேரத்தில் தான் பேச முடியும். பேச வேண்டிய நேரத்தில் பேச அனுமதிக்கிறேன் என்றார். ஆனாலும் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கள்ளச்சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் கூறியதாவது:- 183 பேர் சிகிச்சையில் இருந்ததாகவும், அதில் 55 பேர் உயிரிழந்ததாகவும் செய்திகள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன. இந்த அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருகிறது.
கொஞ்சம் வேகமாக துரிதமாக செயல்பட்டு இருந்தால் நிறைய உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். 300 மீட்டர் தொலைவில் தான் காவல் நிலையம் இருக்கிறது. அதன் அருகே தான் நீதிமன்றம் இருக்கிறது. அதுமட்டுமில்லை இந்த அளவுக்கு கள்ளச்சாராயம் விற்பனை நடந்திருப்பது எப்படி போலீசுக்கு தெரியாமல் இருந்திருக்கும். அவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. எனவே சிபிசிஐடி விசாரணை செய்தால் இதில் உண்மை வெளி வராது. எனவே சிபிஐ விசாரணை வேண்டும்.
மாவட்ட ஆட்சியரே ஒரு பொய்யான தகவலை சொன்னால் எப்படி ஒரு நபர் ஆணையத்தில் மட்டும் உண்மை கிடைக்கும். ஏழை மக்களுக்கு உண்மை விவரம் தெரிய வர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை வேண்டும். கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து உயர் அதிகாரிகள், காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்படியும் இப்படியொரு சம்பவம் நடந்தால் இந்த ஆட்சி எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்று பாருங்கள்.
உண்மை குற்றவாளிகளை நாட்டு மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை வேண்டும். இதனை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். 3 ஆண்டுகளாக தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவதாக செய்திகளில் வந்தது. ஆனால் இந்த விவகாரம் முதல்வருக்கும் தெரியாதாம். டிஜிபிக்கும் தெரியாதாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கள்ளக்குறிச்சியில் இருக்கிறது.
மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் நடந்து இருக்கிறது. திமுக கவுன்சிலர்கள் 2 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அந்த ஊர் மக்களே தெரிவித்தனர். முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்படி இருக்கும் போது இப்படி ஒரு சம்பவம் அரங்கேறுகிறது என்றால் இது ஆட்சியின் கையாலாகாதத்தனம். எனவே இந்த சம்பவத்தில் நீதி கிடைக்கவேண்டும் என்றால் சிபிஐ விசாரணை வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
முன்னதாக அப்பாவு கூறுகையில், "ஒரு விஷயம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கான கடிதம் தரவில்லை என்றாலும் கூட பேச அனுமதிக்கிறேன் என சொல்கிறேன். ஆனால் அப்போதும் அவர்கள் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு கள்ளச்சாராய விவகாரம் குறித்து பேச வேண்டும் என அமளியில் ஈடுபடுகிறார்கள். கேள்வி நேரம் என்பது மக்களுக்கான நேரம்..
எதிர்க்கட்சிகளின் நேரம் கிடையாது. அந்த நேரத்தில் மக்களின் பிரச்சினைகளைத்தான் பேச வேண்டும். 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு இது தெரியாமலா இருக்கும். சட்ட நடவடிக்கைகளை படித்துவிட்டுத்தானே எம்எல்ஏ ஆகிறோம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications