‛ஸ்டாலினுக்கு பிரஷர் தரும் எடப்பாடி’.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய 24ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியான நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வலியுறுத்தி 24ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியாகி இருக்கும் சம்பவம் மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது. அதாவது கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 150க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்பட பல இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் சிகிச்சை பலனின்றி பலர் தொடர்ந்து இறந்து வருகின்றனர். தற்போது வரை மொத்தம் 42 பேர் பலியாகி உள்ளனர்.

அதாவது மெத்தனால் கலந்த பாக்கெட் சாராயத்தை வாங்கி குடித்த நிலையில் அவர்களுக்கு திடீர் வாந்தி, வயிற்றெரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று, இன்று என்று 2 நாளில் மட்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் 42 பேர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இத்தகைய சூழலில் தான் கள்ளச்சாராய விற்பனையை தமிழக அரசு தடுக்க தவறியதாக கூறி எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கள்ளக்குறிச்சியில் இன்று சென்றார். அங்கு கள்ளச்சராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இறந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதோடு கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதற்கு உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். அதோடு அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.
இத்தகைய சூழலில் தான் நடிகர் விஜய் கள்ளக்குறிச்சி புறப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் நுழைந்துள்ள நடிகர் விஜய் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டுள்ளார். இன்று இரவு 8 மணிக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை அவர் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். முன்னதாக நடிகர் விஜய் இந்த சம்பவம் குறித்து தமிழக அரசை குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாநில அரசை கண்டித்தும், முதல்வர் ஸ்டாலினை பதவி விலக்கோரியும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛ தமிழ் நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய, விடியா திமுக அரசைக் கண்டித்தும்; கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் பலர் பலியான சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்.
அதோடு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும். மேலும் முதல்வர் பதவி விலக வலியுறுத்தியும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. அதன்படி வரும் 24ம் தேதி அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளது'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications