கள்ளக்குறிச்சி கலவரம்.. வன்முறையாளர்களை கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு - சைலேந்திரபாபு உத்தரவு
கனியாமூர் பள்ளி வன்முறை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை: கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து விசாரிக்க சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வதந்தி மற்றும் போலி செய்திகளை பரப்ப வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கியவர்கள்,வதந்திகளை பரப்பிய யூடியூப் சேனல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கள்ளக்குறிச்சி கனியாமூர் கிராமத்தில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் தகவல் வெளியானது.
மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையில் நேற்று முன்தினம் இப்போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

144 தடை உத்தரவு
மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியதுடன், மாணவர்களின் கல்வி சான்றிதழ்களையும் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் தொற்றிக் கொண்டதால் கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

5 பேர் கைது
இதனிடையே தற்கொலைக்கு முன்பாக மாணவி எழுதிய கடிதத்தை போலீசார் வெளியிட்ட நிலையில், தான் படிக்கவில்லை என்று கூறி இரண்டு ஆசிரியர்கள் தன்னை துன்புறுத்துவதாக குறிப்பிட்டதன் காரணமாக பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை 15 நாட்கள் சிறைக்காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதை அடுத்து 5 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திட்டமிட்ட வன்முறை
இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது என்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டதாக கூறி இதுவரை 300ற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
இந்தநிலையில் கனியாமூர் பள்ளியில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தனது இல்லத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, டி.ஜி.பி. சைலேந்திர பாபு, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. தேவ ஆசீர்வாதம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு
பள்ளியில் நடந்த வன்முறை குறித்தும், மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு, இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்க குழு அமைக்கலாமா? உள்ளிட்டவை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து விசாரிக்க சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

6 பேர் கொண்ட குழு அமைப்பு
சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். வன்முறையின் பின்னணி ,வீடியோ ஆதாரங்கள் மூலம் நபர்களை அடையாளம் காணுதல், வதந்தி மற்றும் போலி செய்திகளை பரப்ப வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கியவர்கள் ,வதந்திகளை பரப்பிய யூடியூப் சேனல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications