வன்னியரசு ஜாதி தலைவரா.. அன்புமணிய சொல்வீங்களா? நெட்டிசனை தெறிக்கவிட்ட கழுவேத்தி மூர்க்கன் இயக்குநர்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைத் தலைவர் வன்னியரசுவை ஜாதி தலைவர் என்று குறிப்பிட்ட நெட்டிசனுக்கு பேஸ்புக்கில் கழுவேத்தி மூர்க்கன் இயக்குநர் உரிய பதிலடியை கொடுத்து இருக்கிறார்.
சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான மாமன்னன் திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றதைபோல் அருள்நிதி நடித்த கழுவேத்தி மூர்க்கன் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. ஏற்கனவே ஜோதிகாவை வைத்து ராட்சசி என்ற சமூகத்துக்கு தேவையான சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் கௌதமராஜ் இப்படத்தில் சாதி ஆணவத்தை அடித்து நொறுக்கி இருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நாளை சென்னை கே.கே.நகரில் நடைபெற உள்ளது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட இயக்குநர் கௌதம் ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி குறித்த போஸ்டரை இயக்குநர் கௌதம் ராஜ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவின் கீழ் ஆதீ இராசன் என்ற நபர், "இயக்குநரே ஒரு ஜாதிக்கான அரசியலாளரை மட்டும் அழைத்தால் நியாமா? இதில் எங்கிருக்கிறது சமத்துவம்? சாதிகள் ஒருங்கிணைப்பு ஆவல்? நீங்களும் குறிப்பிட்ட சாதிக்காகத்தான் கலைத்துறையைப் பயன்படுத்துகிறீரா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த இயக்குநர், "இது என்ன மாதிரியான பார்வை புரியவில்லை ஓபிஎஸையோ, இபிஎஸையோ திமுகவின், காங்கிரஸின், வேறு எந்த தலைவரையோ, ஏன் பாமகவின் அன்புமணியை கூட சாதிய தலைவர் என்று சொல்வதற்கு உங்களுக்கு மனம் வருவது உண்டா. இந்த பொது புத்தியில் உருவாக்கப்பட்டு இருக்கும் உளவியலை களையத்தான் முயன்று கொண்டிருக்கிறோம்." என்றி குறிப்பிட்டார்.

அதற்கு அந்த நபர், "நீங்கள் சாதியை வைத்து வணிகம் செய்ய மறுப்பவர் என்றால்? அதிகார வர்க்கம் கட்டமைத்துள்ள இரு எதிர் எதிர் சாதிய அரசியலாளரை அழையுங்கள் என்கிறேன். இதிலென்ன தவறிருக்கிறது? ஒரு சாதி தலைவரை மட்டும் அழைப்பது சாதி ஒற்றுமைக்கு எந்த வகையில் பயன்படும் என்பதை நீங்கள்தான் விளக்க வேண்டும்?
இதனை உங்கள் மீதான அக்கறையில்தான் சொல்கிறேன். என் விருப்பமெல்லாம் தமிழர்கள் சாதிய ஏற்றத் தாழ்வுகளைக் களைந்த தமிழர் என்கிற ஓரின மக்களாகப் பழைய தமிழ் வாழ்வியல் வாழ வேண்டும் என்பதே!!!" என்று குறிப்பிட, இயக்குநரோ, "இதை வன்மையாகவே நான் கண்டிக்கிறேன் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இணைந்து வாழ்வதற்கு வழி என்று சொல்லிவிட்டு உடனடியாக வெறுப்பை உமிழ்வதா.." என்று குறிப்பிட்டார்.,
அதற்கு அந்த நபர், "நியாத்தைக் கேட்டாலுமா கண்டிப்பு ? உங்கள் மனம் முழுக்க ஒற்றைச் சாதிய சிந்தனையின் வெளிப்பாடு இது. உங்கள் திரைக்கதை சமூக சமத்துவத்திற்கானதல்ல என்பதை தற்போது முழுமையாகப் புரிந்துக்கொள்ள முடிகிறது !!!" என்று விமர்சித்தார்.
அதற்கு இயக்குநர் கௌதம ராஜ், "என் திரைப்படத்தில் அந்த எஸ்பி பேசுவார். என்ன கலர் கண்ணாடி போட்டு நீ இந்த சமுதாயத்தை பார்க்கிறாயோ, அதே கலர்ல தான் கண்ணாடிக்கு தெரியும். கழட்டிட்டு பார். எல்லாம் அதோட ஒரிஜினல் கலர்ல தெரியும்." என்று பதிலளித்தார்.
இதற்கு அந்த நபர், "நான் நியாயத்தைக் கேட்கும்போது நீங்கள் அந்தக் கண்ணாடியை அணிந்திருக்க வேண்டும். மறந்துவிட்டீர். சரி நீங்கள் மக்களுக்காக இயக்கிய திரைப்படத்தைப் பற்றி கருத்துரைக்க தலித் அரசியலாளரை மட்டும் ஒற்றைச் சார்புடன் அழைக்கும்போது நீங்கள் அந்தக் கண்ணாடியை கழட்டினீரா ? அணிந்தீரா?" என்று கேட்டார்.

மீண்டும் விடாத இயக்குநர் கௌதம் ராஜ், "அவரை அழைத்தது அந்த அமைப்பாளர்கள் நான் இப்பொழுது உங்களிடம் சொல்கிறேன். நீங்கள் சாதியத் தலைவர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் எவராயினும் அவரையும் அந்த கூட்டத்திற்கு அழைத்து வாருங்கள். நான் அவரை பொதுத் தலைவர் என்று நினைத்தே அவருடன் உரையாடுவேன்." என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த அந்த நபர், "உங்களுக்கான நிகழ்ச்சியில் நான் எப்படி ஆட்களை அழைத்துவர இயலும் ? நான் உங்களுக்கு உணர்த்த விரும்புவது, சமூக இணைப்பு, நல்லிணக்க நிகழ்வுகளில் யாருடன் யாருக்கு முரண்பாடிருக்கிறதோ அவர்களைக் கொண்டே தர்க்கம் செய்து இணக்கமும் பேண வேண்டுமென்கிறேன். இது உங்களுக்கும் புகழ் சேர்க்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் பயன் சேர்க்கும் அவ்வளவே!!!" என்று பதிலளித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications