MK Stalin: தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்த மத்திய அரசு முயல்கிறது! முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த நிகழ்ச்சி தங்களைப் பாராட்டிக் கொள்ள இல்லை என்றும் அடுத்த பேட்ச் மாணவர்களின் படிப்பு ஆர்வம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம் என்றார். மேலும், மாணவர்களின் பேச்சைக் கேட்டுத் தான் எமோஷ்னல் ஆகிவிட்டதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசு சார்பில் "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" நிகழ்ச்சி இன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார். இதில் பல்வேறு மாணவ மாணவிகளும் தமிழக அரசுத் திட்டங்கள் எந்தளவுக்குத் தங்களுக்குப் பலன் கொடுத்தது என்பதைப் பகிர்ந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "இங்கு மாணவர்கள் பேசிய பேச்சைக் கேட்டு எமோஷ்னல் ஆகிவிட்டேன்.. நமது உழைப்பின் பலன் கண் முன் தெரியும் என்பதை உணர்ந்துள்ளேன். எங்களைப் பாராட்டிக் கொள்வதற்காக இந்த விழா இல்லை.. அடுத்த பேட்ச் மாணவர்களின் படிப்பு ஆர்வம் அதிகரிக்க வேண்டும். அதற்காகவே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரேவந்த் ரெட்டிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கனிமொழி மூலம் இந்த நிகழ்ச்சிக்கு ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுத்தோம். மாணவர்கள் சார்ந்த நிகழ்ச்சி எனச் சொன்னவுடன் வருவதாக ஒப்புக்கொண்டார். தமிழ்நாட்டில் மகளிர் இலவச பஸ் பயணத்தை போலவே தெலுங்கானாவிலும் அவர் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி இருக்கிறார். அதேபோல தெலுங்கானாவில் இருக்கும் நல்ல திட்டங்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வர நாங்கள் தயாராக இருக்கிறோம். அதுவே ஆரோக்கியமான வளர்ச்சி.
நாடே முன்னேறும்
மாணவச் செல்வங்களே! நீங்கள் படித்து முன்னேறினால்.. நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குடும்பமும் முன்னேறும்.. உங்களுடைய அடுத்தடுத்த தலைமுறைகளும் முன்னேறும்.. இதுபோல குடும்பங்கள் முன்னேறினால் தான் மாநிலங்கள் முன்னேறும்.. மாநிலங்கள் முன்னேறினால், நாடு முன்னேறும்! இதன் காரணமாகவே கல்வியின் முக்கியத்துவத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகிறோம்.
மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
ஒரு வேளை உணவு அல்லது மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் என்ன மாற்றம் வரும் என சிலர் நினைக்கலாம்.. ஆனால், காலை உணவுத் திட்டம் வந்த பிறகு மாணவர் வருகை அதிகரித்துள்ளது. புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்களுக்குப் பிறகு +2 முடித்த மாணவர்களில் 75% பேர் உயர்கல்வியில் சேருகிறார்கள். குறிப்பாகப் பெண்கள் உயர்கல்வியில் சேர்வது அதிகரித்துள்ளது.
தடை ஏற்படுத்த முயற்சி
கல்வியில் தமிழகம் பெற்ற எழுச்சி, பல மாநிலங்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்தத் திட்டங்கள் அவர்கள் மாநிலத்திலும் செயல்படுத்த முயல்கிறார்கள். இந்த எழுச்சியை பொறுத்து கொள்ள முடியாமலேயே கல்விக்குத் தடை ஏற்படுத்த மத்திய அரசு முயல்கிறது. நம்முடைய வளர்ச்சியைப் பார்த்து, தடை ஏற்படுத்துகின்ற சிலருக்குப் பயத்தை வர வைக்க வேண்டும்! என்னுடைய இலக்கு என்பது அனைவருக்கும் கல்வி என்பது மட்டுமே.. உங்கள் படிப்புக்குத் துணையாக வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்த ஸ்டாலின் இருக்கிறேன்! கல்வியில் சிறந்த தமிழ்நாடு, கல்வியிலேயே உயர்ந்த தமிழ்நாடாக மாறவேண்டும்" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications