Thug life: "செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க முடியாது.." கன்னட மொழி சர்ச்சை.. கமல் ஹாசன் திட்டவட்டம்
சென்னை: கன்னட மொழி விவகாரத்தில் கமல் பேச்சு ஏற்கனவே சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக் லைஃப் படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் எனக் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இருப்பினும், இந்த விவகாரத்தில் தான் தவறு செய்யாததால் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று கமல் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைப் படம் அடுத்த வாரம், அதாவது ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. நாயகன் படத்திற்குப் பிறகு சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதில் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் என்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே நடித்துள்ளது.

நாடு முழுக்க படத்தை மிக பெரியளவில் வெளியிட தக் லைப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக புரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் படக்குழு ஈடுபட்டு வந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் நடந்த தக் லைப் இசை வெளியிட்டு விழாவில் கமல் குறிப்பிட்ட சில கருத்துக்குக் கன்னட அமைப்பினரிடையே எதிர்ப்பு கிளம்பியது.
கமல் பேச்சால் வெடித்த சர்ச்சை
அதாவது, "தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் (சிவராஜ் குமார்) ஒப்புக் கொள்வார் என்றே நினைக்கிறேன்" எனக் கமல் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்தபோதே பல மொழி ஆய்வாளர்கள் குறிப்பிட்டதையே தான் சொன்னதாகக் கூறியிருந்தார். இருப்பினும், கமல் விளக்கத்தை ஏற்க மறுத்த கன்னட அமைப்புகள் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் எனக் கூறி வருகிறார்கள்.
இந்த விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் கூட கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே வருகிறது. அங்கு ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ், எதிர்க்கட்சியாக உள்ள பாஜக என இரண்டுமே கமல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கமல் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்
மன்னிப்பு கேட்க முடியாது
இருப்பினும், கமல் தனது நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருக்கிறார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்பதைத் திட்டவட்டமாக மீண்டும் கூறியுள்ள கமல், தான் தவறு செய்திருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன் என்றும் இப்போது தான் தவறு எதுவும் செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறார். தவறுக்கு மட்டுமே மன்னிப்பு என்பதை லைஃப் ஸ்டைலாக வைத்துள்ளதால் இதில் யாரும் தலையிட வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்.
கமல் திட்டவட்டம்
இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் தவறு செய்திருந்தால், மன்னிப்பு கேட்பேன்.. அதில் எனக்குப் பிரச்சினை இல்லை.. ஆனால், தவறு செய்யவில்லை என்றால் நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. அதுவே எனது லைஃப் ஸ்டைல் இல்லையென்றால் நான் எதற்காகவும் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன். இதுவே எனது வாழ்க்கை முறை.. தயவுசெய்து இதில் யாரும் தலையிடாதீர்கள்" என்றார். மேலும், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று குறிப்பிட்ட அவர் நாட்டின் சட்டம் மற்றும் நீதியைத் தான் முழுமையாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications