அது ஏன் கமல் மதுரையிலேயே "மய்யம்" கொண்டிருக்கிறார்.. பிரசாரமும் அங்கிருந்துதானாம்.. என்ன காரணம்?
மதுரையில் பிரச்சாரத்தை துவங்க உள்ளார் மநீம தலைவர் கமல்ஹாசன்
சென்னை: டிசம்பர் 13ஆம் தேதி முதல் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்க போகிறார்.. இது சம்பந்தமாக அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகி உள்ள நிலையில், "மதுரை" முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
13ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக மய்யம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த முறையும் கமல் மதுரையில் இருந்துதான் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.. தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை கடந்த மாதமே மதுரையில் தொடங்க கமல் முடிவு செய்திருந்தார். ஆனால், கொரோன வைரஸ் பரவல் காரணமாக அனுமதி கிடைக்காததால் தேர்தல் பிரச்சாரத்தை தள்ளிவைத்தார்.

பிரச்சாரம்
இதற்கிடையே, அரசியல் கட்சிகள் கூட்டங்களை நடத்த தமிழக அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து வருகிற 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 4 நாட்கள் முதல்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். அந்த வகையில் மதுரையிலேயே திட்டமிட்டபடி ஆரம்பிக்கிறார். இதற்கு என்ன காரணம் என்று உறுதியாக தெரியவில்லை.

மதுரை
தன்னுடைய அரசியல் கட்சியை முதன்முதலில் அறிவித்ததுகூட இதே மதுரையில்தான்.. "மதுரையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று சொல்லிவிட்டு கிளம்பினார் கமல்.. "யாதும் ஊரே" என்று பொதுப்படையாக சொன்னாலும், ஒவ்வொரு முறையும் இதே மதுரையில்தான் கமல் பிரச்சாரத்தை துவக்கி நடத்துகிறார் என்பது தொடர்ந்து கவனிக்கத்தக்கதாக உள்ளது.

சென்ட்டிமென்ட்
ஒருவேளை இது சென்ட்டிமென்ட்டாக கூட இருக்கலாம் என்கிறார்கள்.. இதே மதுரையில்தான் 1950-களில் எம்ஜிஆர் தன்னுடைய முதல் ரசிகர் மன்றத்தை தொடங்கினார்... அந்த கணமே அவருக்கு மதுரை மண்ணில் ஏகப்பட்ட செல்வாக்கு கூடிவிட்டது.. 1974-ல் "எனது கொள்கை அண்ணாயிஸம்" என்று எம்ஜிஆர் அறிவித்ததும் இங்குதான். மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்ஜிஆர் பெற்ற அமோக வாக்குகளே அதற்கு சாட்சி!

விஜயகாந்த்
அதன்பாணியைதான் விஜயகாந்த்தும் ஆரம்பித்தார்.. 2005-ல் தேமுதிகவை மதுரையில் தொடங்கினார். இப்போதுவரை விஜயகாந்த் மீது மதுரை மக்களுக்கு உள்ள பாசம் கொஞ்சமும் குறையவே இல்லை.. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு முறை தேர்தல் என்றாலும் முக அழகிரியின் முக்கியத்துவத்தை உணர்த்துவது இதே மதுரைதான்.. தென் மாவட்டங்களில் திமுகவின் வாக்குகளை அலேக்காக கொண்டு வந்து சேர்த்துவிடுவதில் அழகிரிக்கு நிகர் அழகிரியே.. அதனால்தான், எப்போதுமே கருணாநிதி, தென்மாவட்டத்தை பற்றி கவலையேப்பட மாட்டார்!

பிரச்சாரம்
அந்த வகையில், அரசியல் பிரமுகர்களுக்கு மாபெரும் வெற்றிகளை வாரிகுவித்த மண் இது என்பதால், கமல் இங்கு பிரச்சாரத்தை ஒவ்வொருமுறையும் ஆரம்பிக்கிறாரா என்று தெரியவில்லை.. அல்லது மதுரை மக்களின் அரசியல் ஆர்வத்தை புரிந்து கொண்டு இந்த அதிரடியை கையில் எடுக்கிறாரா என்று தெரியவில்லை.. ஆனால், மதுரை மீது கமலுக்கு உள்ள தீராக்காதல் இதன்மூலம் தெரிகிறது.. மதுரை மக்களும் கமலை எப்போதுமே தூக்கி வைத்து கொண்டாட தவறியதே இல்லை!












Click it and Unblock the Notifications