Thug Life: கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்.. பகையை உருவாக்காதீங்க.. கன்னட அமைப்பினர் டோனில் தமிழிசை
சென்னை: கன்னடம் தமிழ் மொழி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் கமல் மீது தவறு உள்ளது. அன்பு மன்னிப்பு கேட்காது என்று கூறிவிட்டு, நீண்ட விளக்கத்தை கமல்ஹாசன் கூறுகிறார். சுயநல காரணங்களுக்காக மாநிலங்களுக்கு இடையே பகைமையை உருவாக்காதீர்கள் என்று தமிழிசை கூறியுள்ளார்.
'தக் லைப்' படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் கர்நாடகத்தில் அதை திரையிட மாட்டோம் என்று கன்னட சினிமா வர்த்தக சபை கூறியுள்ளது. தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என கமல்ஹாசன் பேசியதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராகப் போராட்டங்களில் குதித்துள்ளனர்.

தீ வைத்து எரிப்பதாக மிரட்டல்
கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் மன்னிப்பு கோரினால் மட்டுமே அந்த படத்தை கர்நாடகத்தில் திரையிடுவோம் என்றும் கூறியுள்ளது. ஆனால் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று கமல்ஹாசன் திட்டவட்டமாக கூறிவிட்டார். எனவே 'தக் லைப்' படத்தை கர்நாடகத்தில் திரையிட்டால், அந்த தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம், தீவைத்து எரிப்போம் என கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
நீதிமன்றத்தில் கமல் வழக்கு
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், 5- ம் தேதி வெளியாகும் 'தக் லைப்' படத்தை தடுக்கக்கூடாது என்று கர்நாடக அரசு, போலீஸ் துறை மற்றும் கன்னட சினிமா வர்த்தக சபைக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது. மேலும் இந்த சினிமா வெளியாகும் தியேட்டர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என போலீஸ் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. உங்கள் பேச்சு சிவராஜ் குமாருக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் பேச்சை நீங்கள் மறுக்கவில்லை, ஒப்புக்கொண்டீர்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தி படத்தை வெளியிடக் கோருகிறீர்கள். நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் கர்நாடகாவில் உங்கள் படம் ஓட வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள்.
கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்
கமல்ஹாசனாக இருந்தாலும், யாராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது. கமல்ஹாசன் ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும்.மன்னிப்புக் கேளுங்கள், அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் கர்நாடகாவிலிருந்தும் சில கோடிகளை சம்பாதிக்க விரும்புகிறீர்கள்.
மன்னிப்பு ஒன்று தான் தீர்வு. ரூ.300 கோடி செலவில் படம் எடுத்ததாக கூறும் நீங்கள் கர்நாடகாவில் சில கோடிகள் சம்பாதிக்க நினைத்தால் மன்னிப்பு கேட்டிருக்கலாம். இந்த படத்தை நானே பார்க்கலாம் என நினைத்தேன். ஆனால் இந்த விவகாரத்தால் திரைப்படத்தை என்னால் பார்க்க முடியாது" என்றும் கூறினார். இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தமிழிசை பேச்சு
இந்த நிலையில், கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நமது தன்னலமற்ற ராணுவம் தேசத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் போது, சுயநல காரணங்களுக்காக மாநிலங்களுக்கு இடையே பகைமையை உருவாக்காதீர்கள்.
அன்பு மன்னிப்பு கேட்காது என்று கூறிவிட்டு, நீண்ட விளக்கத்தை கமல்ஹாசன் கூறுகிறார். அதற்கு பதில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனெனில் அவர் தவறு செய்துள்ளார். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications