விட்ருங்க சார்! கோரிக்கையை மறுத்த நீதிமன்றம்! டிடிஎப் வாசனை அக்டோபர் 3 வரை சிறையில் அடைக்க உத்தரவு
சென்னை: ‛வீலிங்' செய்து விபத்தில் சிக்கி கைமுறிந்த யூடியூபர் டிடிஎப் வாசனை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அக்டோபர் 3ம் தேதி வரை 15 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த வேளையில் நீதிமன்றத்தில் டிடிஎப் வாசன் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நீதிபதி ஏற்க மறுத்து சிறைக்கு அனுப்பிய தகவல் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் விலையுயர்ந்த பைக்குகளில் டிராவல் செய்தும், சாகசம் செய்தும் யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார். இவரை ஏராளமான இளைஞர்கள் பாலோ செய்கிறார்கள். அதோடு சிறுவர்களும் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தான் டிடிஎப் வாசன் தொடர்ந்து சாகச வீடியோக்கள், சாலையில் வேகமாக செல்லும் வீடியோக்கள் இணையதளங்களில் அவ்வப்போது வெளியாகி விவாதத்தை கிளப்பும். இதுதொடர்பாக தமிழ்நாட்டில் பல போலீஸ் நிலையங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் டிடிஎப் வாசன் பைக்கில் வேகமாக செல்வதை மட்டும் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். தற்போது அவர் 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்தகைய நிலையில் தான் நேற்று முன்தினம் டிடிஎப் வாசன் விலையுயர்ந்த தனது பைக்கில் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மராட்டியத்துக்கு புறப்பட்டு சென்றார்.
காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர் பைக்கில் முன்சக்கரத்தை தூக்கி வீலிங் செய்ய முயன்றார். இந்த வேளையில் அவரது கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்தில் சிக்கியது. இதில் டிடிஎப் வாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். பைக் பல அடி தூரத்துக்கு பல்டி அடித்து விழுந்து நொறுங்கியது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தின்போது அவர் தலையில் ஹெல்மெட் போட்டு இருந்ததால் பெரிய அளவில் அடிபடாமல் தப்பித்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். அதன்பிறகு அவர் தனது நண்பர் வீட்டில் இருந்தார். இதற்கிடையே டிடிஎப் வாசன் விபத்தில் சிக்கிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் போலீசார் டிடிஎப் வாசன் மீது வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுதல், பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் டிடிஎப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அதன்பிறகு இன்று போலீசார் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்தனர். அதன்பிறகு காஞ்சிபுரத்தில் உள்ள நீதிமன்றத்தில் அவர் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
அதாவது டிடிஎப் வாசன் சிக்கிய விபத்தில் உயிர் சேதம்ஏற்படவில்லை. யாருக்கு எந்த சேதமும் இல்லை. அவரே வாகனத்தை ஓட்டி சென்று விழுந்து இருக்கிறார். இத்தகைய சூழலில் அவர் மீது வலிமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யக்கூடாது. ஆனால் போலீசார் அதனை செய்துள்ளனர். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கி விடுவிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
ஆனால் இதனை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இதுதொடர்பாக நீதிமன்ற நீதிபதி ‛‛தொடர்ந்து அவர் அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுகிறார். பலமுறை வார்னிங் விடுக்கப்பட்டுள்ளது. தற்போதும் ஆபத்தான முறையில் பைக் ஓட்டியுள்ளார்'' எனக்கூறினார். மேலும் டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம் அக்டோபர் மாதம் 3ம் தேதி வரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து டிடிஎப் வாசன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.












Click it and Unblock the Notifications