தீவிரமடையும் சாம்சங் ஊழியர்களின் போராட்டம்.. மேலும் 14 ஊழியர்கள் சஸ்பெண்ட்.. என்ன நடக்கிறது?
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் மேலும் 14 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சிஐடியூ தொழிற்சங்க ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இங்கு தொழிற்சங்கம் அமைக்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களை சி.ஐ.டி.யு. நடத்தியது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவு, போராட்டம் என பல நிகழ்வுகளுக்கு பிறகு சிஐடியூ தொழிற்சங்கத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்து.

இதனிடையே சி.ஐ.டி.யு. தொழிற்சங்க ஊழியர்களை அதிலிருந்து விலகி நிர்வாகம் ஏற்படுத்தி உள்ள கமிட்டியில் இணைய வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் 3 பேரை சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துது.
இதனிடையே 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக நேற்றுடன் 16-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து வருகிறது. இது குறித்து நேற்று முன்தினம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் மேலும் 12 தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க போவதாக சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம் திட்டவட்டமாக சி.ஐ.டி.யு.விடம் தெரிவித்திருந்தது.
சாம்சங் நிர்வாகத்தின் இந்த பதிலால் போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்த நிலையில் நேற்று தொழிற்சாலை வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வந்த தொழிலாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மூலம் உற்பத்தி நடக்கும் இடத்திற்கு சென்று உற்பத்தியை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு எழுந்தது.
தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் வருவாய் துறையினர் மற்றும் சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் உள்பட போலீசார் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். இதனிடையே நேற்று வரை 16வது நாளாக தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று மேலும் 14 ஊழியர்களை சாம்சங் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. தொடர் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சாம்சங் நிர்வாகம் மீது குற்றம்சாட்டிய ஊழியர்கள் கண்டித்து காஞ்சிபுரம் வெள்ளைகேட் அருகே 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications