சட்டசபை தேர்தலில் போட்டியிட கனிமொழி ஆர்வம்.. எந்த தொகுதி? ஸ்டாலின் கையில் முடிவு
சென்னை: தூத்துக்குடி எம்பியாக இருக்கும் கனிமொழி வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் தான் திமுகவின் முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தப்படும் நிலையில் கனிமொழியின் இந்த முடிவு திமுகவில் பரபரப்பை கூட்டி உள்ளது. இந்நிலையில் தான் கனிமொழி 5 மாவட்டங்களில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் களமிறங்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் முடிவு என்னவாக இருக்கும்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு இன்று முதல் நேர்க்காணல் நடைபெற உள்ளது.

எப்படியாவது வரும் சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுகவினர் களப்பணியை தொடங்கி உள்ளனர்.
சட்டசபை தேர்தலில் கனிமொழி?
இதற்கிடையே தான் தற்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது திமுக எம்பியான கனிமொழி தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்குள் நுழைய ஆர்வமாக இருக்கிறாராம். இதற்கு முன்னோட்டமாக தான் கனிமொழி எம்பியின் ஆதரவாளர்கள் திமுகவில் அவரது பெயரில் விருப்ப மனுக்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி கனிமொழி தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே தேசிய அரசியலில் தான் முன்னிறுத்தப்படுகிறார். இதனால் அவர் மாநில அரசியலுக்கு திரும்ப நினைக்கிறார். அந்த வகையில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட அவர் ஆர்வமாக உள்ளார்.
டெல்டாவில் 2 மாவட்டங்கள்
அதன்படி 4 மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இந்த லிஸ்ட்டில் டெல்டா மண்டலத்தை சேர்ந்த திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் உள்ளன. இதில் திருவாரூர் என்பது மறைந்த முன்னாள் முதல்வரும், கனிமொழியின் தந்தையுமான கருணாநிதியின் சொந்த ஊராகும். அதேபோல் திருவாரூர் சட்டசபை தொகுதியில் 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் கருணாநிதி போட்டியிட்டு எம்எல்ஏவாகி இருந்தார்.
அதேபோல் 1997 ல் திருவாரூர் தனி மாவட்டமாக பிரிவதற்கு முன்பு அது தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக தான் இருந்தது. மேலும் டெல்டா என்பது திமுகவின் கோட்டையாக உள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்று கனிமொழி நினைப்பதாக கூறப்படுகிறது.
தென்மண்டலத்தில் 3 மாவட்டங்கள்
இதுதவிர தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஏதேனும் ஒன்றில் அவர் களமிறங்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது கனிமொழி எம்பி திமுகவில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் தென்மண்டல பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இவரது கட்டுப்பாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் வருகின்றன. இந்த மாவட்டங்களில் உள்ள உட்கட்சி பிரச்சனைகளை தீர்த்து அனைவரையும் ஒருங்கிணைத்து வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது தான் கனிமொழியின் பணியாக உள்ளது. இந்நிலையில் தான் அவர் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு சட்டசபை தொகுதிகளில் போட்டியிட முயன்று வருவதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி நிலவரம் என்ன?
கனிமொழி தற்போது தூத்துக்குடி எம்பியாக இருக்கிறார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட ஆர்வம் காட்டலாமே என்று பலருக்கும் கேள்வி வரலாம். ஆனால் அதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். அதாவது தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கீதா ஜீவன் எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் உள்ளார். இவர் கிறிஸ்தவ நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர். அதேபோல் திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் உள்ளார். இவர் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்.
இந்த 2 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் கனிமொழி களமிறங்கினால் வெற்றி எளிமையாக கிடைக்கும். ஆனால் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் என 2 பேரும் தங்களின் தொகுதியில் பலமாக இருப்பதோடு, தொடர்ந்து வென்று வருகின்றனர். மேலும் இருவரும் கனிமொழி எம்பிக்கு நெருக்கமானவர்களாக உள்ளனர். இதனால் அவர்களின் வாய்ப்புகளை பறித்து அதில் ஒன்றில் கனிமொழி போட்டியிடுவாரா? என்பது கேள்வியை எழுப்பி உள்ளது.
விளாத்திக்குளம் - கோவில்பட்டி
இந்த 2 தொகுதிகள் தவிர ஒட்டப்பிடாரம் தனி தொகுதியாகும். ஆதிதிராவிடராக இருந்தால் மட்டுமே அங்கு போட்டியிட முடியும். இதனால் அந்த தொகுதியில் கனிமொழியால் களமிறங்க முடியாது. அதேபோல் கோவில்பட்டி அதிமுகவின் கோட்டையாக உள்ளது. இங்கு ஒருமுறை கூட திமுக வென்றது இல்லை. கடந்த 3 தேர்தல்களில் அதிமுகவின் கடம்பூர் ராஜு வெற்றி பெற்றுள்ளார். இதனால் அதனை கனிமொழி களமிறங்குவது சந்தேகம் தான்.
இதுதவிர விளாத்திக்குளம் சட்டசபை தொகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. இது அதிமுகவின் கோட்டையாக இருந்தது. 2001, 2006, 2011, 2016 சட்டசபை தேர்தல்களில் அதிமுக தான் வென்றது. அதன்பிறகு 2021ல் தான் திமுகவின் மார்கண்டேயன் வெற்றி பெற்றார். இவர் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர்.
மேலும் கனிமொழி எம்பி தென்மண்டல பொறுப்பாளர் என்ற முறையில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் ஸ்டாலின் அனுமதித்தால் கன்னியாகுமரி தவிர்த்து தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஏதேனும் ஒரு சட்டசபை தொகுதியில் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் அனுமதிப்பாரா?
ஆனால் கனிமொழிக்கு ஸ்டாலினின் அனுமதி கிடைக்குமா? என்பது கேள்விக்குறி தான். திமுகவில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறகு முதல்வர் வேட்பாளராக அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டு வருகிறார். இதற்கு முதற்படியாக தான் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் கனிமொழி எம்பியும் மாநில அரசியலில் ஈடுபட்டால் அது உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தலாம். இதனால் கனிமொழிக்கு மாநில அரசியல் ஆசையை ஸ்டாலின் நிறைவேற்றுவாரா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கனிமொழியின் அரசியல் பின்னணி
கனிமொழி தற்போது திமுகவின் துணை பொதுச்செயலாளராக உள்ளார். இவருக்கு வயது 58. இவர் தீவிர அரசியலில் களமிறங்கியதில் இருந்தே எம்பியாக தான் இருந்து வருகிறது. கடந்த 2007 ல் முதல் முறையாக திமுக சார்பில் ராஜ்யசபா எம்பியானார். அதன்பிறகு 2013ல் மீண்டும் ராஜ்யசபா எம்பியானார்.
அதன்பிறகு முதல் முறையாக தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் 2019ல் வென்று எம்பியானார். கடந்த 2024 லோக்சபா தேர்தலில் மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட்டு வாகை சூடினார். தற்போது சட்டசபை தேர்தலில் களமிறங்க ஆர்வம் காட்டும் நிலையில் அது நடக்குமா? இல்லையா? என்பதை அறிய நாம் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
-
வானில் தோன்றிய அதிசயம்.. பழைய ஆம்பாசிடர் காரில் விஐபி!தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் சென்ட்டிமெண்ட் -
180 இடங்களில் திமுக வெல்லும்.. தடம் தெரியாமல் வீழும் தவெக.. அப்போ அதிமுக? வெளியான முக்கிய சர்வே! -
மகளிர் உரிமை தொகை மட்டுமல்ல... மகளிர் உரிமையும் முக்கியம்.. திமுக, அதிமுகவின் கள நிலவரம் -
மொத்தமாக அள்ளும் திமுக.. மீண்டும் ஸ்டாலின் ஆட்சி தானாம்! அதிமுக, விஜய்க்கு படுதோல்வி! புதிய சர்வே -
அடுத்தடுத்து வெளியான 4 சர்வே.. எல்லாம் சொல்லும் ஒரே விஷயம்.. நாம் தமிழர் கட்சிக்கு பெரிய சிக்கல்! -
8000 ரூபாய் கூப்பன் அறிவிப்பு!கவர்ச்சி அறிவிப்பா? தொலைநோக்குத் திட்டமா? -
சட்டமன்ற தேர்தல்: தமிழகம் மட்டும் இல்லை.. நாடே உற்று பார்க்கும் 27 விஐபி தொகுதிகள்.. லிஸ்ட் -
"ஏன் இவ்வளவு நாள் திமுக உடன் கூட்டணி அமையலனு நான் ஃபீல் பண்றேன்.." பிரேமலதா விஜயகாந்த் வருத்தம்! -
மக்கள் நீதி மய்யத்தில் ஒரு 'வசூல்ராஜா'! அந்த ரூ. 30 லட்சம் வளர்ச்சி நிதிக்கு! கறார் காட்டினாரா கமல்? -
யார் யாருக்கோ சீட்? தொண்டர்களைப் புறக்கணிக்கும் திருமா? - விசிகவில் வெடிக்கும் குழப்பம்! -
எடப்பாடிக்கு அதிர்ச்சி! திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளருக்கு தொடர்புடைய இடங்களில் விடிய விடிய சோதனை -
ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் திடீர் மாற்றம்! மகனுக்கு பதிலாக அமைச்சர் காந்தி மீண்டும் களமிறங்குகிறார்












Click it and Unblock the Notifications