தமிழகத்தில் எதிர்க்கட்சி யார்? அதிமுக Vs பாஜக! கனிமொழி சொன்ன பதில் இது தான்!
சென்னை: தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்திருக்கிறார்.
அதிமுகவை பொறுத்தவரை தன்னை காப்பாற்றிக்கொள்ளவே அதிகம் முனைப்பு காட்டுவதாக அவர் கூறியிருக்கிறார்.
இதனிடையே பாஜக எதிர்க்கட்சி போல் செயல்படுகிறது என்ற கூற்று ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என கனிமொழி எம்.பி. தெரிவித்திருக்கிறார்.

புகைப்படக் கண்காட்சி
சென்னை தரமணியில் உள்ள ராஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்று வரும் புகைப்பட கண்காட்சியை கனிமொழி எம்.பி. இன்று பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் யார் எதிர்க்கட்சி என்பது பற்றி பேசினார். அதிமுக, பாஜக, ஆகிய இரண்டு கட்சிகளுமே எதிர்க்கட்சிக்கான தகுதியை பெறவில்லை என்பதை சூசகமாக விமர்சித்த அவர் மத்திய அரசையும் குற்றஞ்சாட்டினார்.

மாநில அதிகாரம்
இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் சட்டத்திருத்த மசோதாவை கடுமையாக எதிர்த்த அவர் மாநில அரசின் உரிமைகளை பறிக்கக்கூடிய எந்த ஒரு நிகழ்வையும் ஏற்க இயலாது எனத் தெரிவித்தார் கனிமொழி எம்.பி. மேலும், மத்திய அரசு கொண்டு வரக்கூடிய மசோதாக்களில் பெரும்பாலானவை மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையிலேயே இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

கண்டிக்கத்தக்கது
மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது எனக் கூறிய கனிமொழி எம்.பி., இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிப்பதை சுட்டிக்காட்டினார். ஊடகங்களில் வேண்டுமானால் பாஜகவை பற்றி பேசலாம், ஆனால் மக்கள் யாரும் பாஜகவை பொருட்படுத்தவே இல்லை என விமர்சித்தார். மேலும், தஞ்சை பள்ளி மாணவி உயிரிழப்பை வைத்து பாஜக அரசியல் செய்து வருவதாக தெரிவித்தார்.

பாஜகவுக்கு கண்டனம்
பிள்ளையை பறிகொடுத்துவிட்டு நிற்கும் குடும்பத்தை வைத்து பாஜக அரசியல் செய்ய முனைவது உள்ளபடியே வருத்தத்திற்குரியது என்றும் கண்டனத்திற்குரியது எனவும் கனிமொழி எம்.பி. தெரிவித்திருக்கிறார். பாஜகவினர் வேண்டுமென்றே பேசுவதை அவர்களின் கருத்துக்களில் இருந்தே அறியலாம் எனக் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications