"விஜய் கவனமாக இருக்கணும்.." கரூர் துயரம் குறித்து.. ஒரே வரியில் நடிகர் சிவராஜ் குமார் சொன்ன பாயிண்டு
சென்னை: கரூர் துயரம் தொடர்பாகப் பிரபலக் கன்னட நடிகர் சிவராஜ் குமார் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். கரூர் சம்பவம் தனக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்த அவர், விஜய் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் ஒரு சகோதரனாக இதைக் கூறிக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த மாதம் கரூரில் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் பிரச்சார நிகழ்வில் இதுபோன்ற ஒரு துயரம் இதற்கு முன்பு நடந்ததே இல்லை. இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நடிகர் சிவராஜ் குமார்
இதற்கிடையே பிரபலக் கன்னட நடிகர் நடிகர் சிவராஜ் குமார் இது தொடர்பாகச் சில கருத்துகளைக் கூறியுள்ளார். கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் தனது மனைவி கீதாவுடன் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு வர வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை என்றும் தற்போது முதல்முறையாகத் தரிசனம் செய்ததாகவும் கூறினார். மேலும், ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யோசித்த செயல்படுங்கள்
தொடர்ந்து விஜய் தொடர்பான கேள்விக்கு, நடிகர் விஜய்யின் அரசியலை வரவேற்பதாகத் தெரிவித்தார். அதேநேரம், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் விஜய் கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். விஜய்யை தனது நண்பர் எனக் குறிப்பிட்ட சிவராஜ் குமார், அவர் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் தெளிவாக யோசிக்க வேண்டும் எனக் கூறினார். கரூர் சம்பவம் எப்படி நடந்தது என்பது தெரியாது என்றும் அவர் கூறினார்.
அவர் மேலும், "ஒரு மனிதனாக கரூர் துயரம் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அடுத்து விஜய் எந்தவொரு முடிவை எடுத்தாலும் யோசித்து நிதானமாக எடுக்க வேண்டும். ஒரு சக நடிகராகவும், ஒரு சகோதரராகவும் இதைத் தான் அவருக்கு கூறுகிறேன்" என்று தெரிவித்தார்.
கரூர் கூட்ட நெரிசல்
கடந்த மாதம் விஜய் கரூரில் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விஜய் பேரணியில் விதிமுறைகள் மீறப்பட்டதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், விஜய் தனது ரசிகர்களைக் கட்டுப்படுத்த தவறியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், கூட்டம் எதிர்பாராத வகையில் அதிகமானதாகக் கூறியது. விஜய்யின் இமேஜை கெடுக்கச் சதி நடப்பதாகவும், உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தவும் கோரியுள்ளது.
குற்றச்சாட்டு
10,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சுமார் 30,000 பேர் விஜய்யை காணக் கூடியிருந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நண்பகல் 12 மணிக்கு வருவதாகச் சொல்லிவிட்டு, மாலை 7 மணி முதல் 7:40 மணிக்குத் தான் பிரச்சாரத்திற்கு வந்துள்ளார். இதனால் காலை முதலே உணவு, தண்ணீர் கிடைக்காததால் பலரும் மயக்கமடைந்தனர்.
இந்தத் துயரத்தைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ₹20 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ₹2 லட்சமும் இழப்பீட்டை விஜய் அறிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் விஜய் சில நாட்களுக்கு முன்பு தான் வீடியோ காலில் பேசிய விஜய், இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications