ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால் பாஜகவில் நடிக்கிறார் அண்ணாமலை.. கார்த்தி சிதம்பரம் பகீர் பேச்சு
ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால் அண்ணாமலை பாஜகவில் இருக்கிறார்- கார்த்தி எம்பி
சென்னை: ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால் பாஜகவில் அண்ணாமலை நீடிக்கிறார் என சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் இன்று ஆலங்குடி, திருமயம் சட்டசபை தொகுதியில் புதிதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு நியமன கடிதங்களை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து கார்த்திக் சிதம்பரம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில் அண்ணாமலை சித்தாந்த ரீதியாக பாஜகவில் இணைந்து பணியாற்றி வருபவர் இல்லை.

ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால் அண்ணாமலை தற்போது பாஜகவில் உள்ளார் என கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு அண்ணாத்த திரைப்படத்தின் போது படப்பிடிப்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்த் ஹைதராபாத் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கொரோனா பரவல்
மேலும் கொரோனா பரவலும் தீவிரமாக இருந்தது. இதையடுத்து நீண்ட யோசனைக்கு பின்னர் கட்சி தொடங்கும் எண்ணத்தை அவர் கைவிட்டார். இதுகுறித்து அவர் 2020 ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. கட்சி ஆரம்பிப்பேன் என்று நம்பிய ரசிகர்கள், மக்களுக்கு என் முடிவு ஏமாற்றம் தரும். தேர்தல் அரசியலுக்கு வராமால் என்னால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை. ரசிகர்களும், மக்களும் என்னை மன்னிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரி
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு தமிழக பாஜக தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. அவர் பதவியேற்ற நாள் முதல் திமுகவை கடுமையாக எதிர்த்து வருகிறார். அது போல் திமுகவும் அண்ணாமலைக்கு உரிய பதிலடியை கொடுத்து வருகிறது. அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் முதற்கொண்டு திமுக கேள்வி எழுப்பி வருகிறது. அது அண்ணாமலையும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்.

அண்ணாமலை
இந்த நிலையில் அண்ணாமலை நிறைய விவகாரங்களில் எடுத்தோம் கவிழ்த்தோம் என பேசி வருவதால் சென்னை கமலாலயத்தில் மத்திய இணையமைச்சர் எல் முருகனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு கொள்கை முடிவுகளை அவர் எடுக்கும் வகையில் தேசிய தலைமை வழி செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை வந்ததும் வார் ரூம் கலாச்சாரம், ஹனி டிராப் உள்ளிட்ட விவகாரங்கள் பாஜகவினரே குற்றச்சாட்டாக பதிவு செய்து வருகிறார்கள்.

காயத்ரி ரகுராம்
அண்ணாமலை வந்த பிறகு காயத்ரி ரகுராம், நிர்மல் குமார், திலீப் உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து விலகிவிட்டார்கள். இவர்கள் அண்ணாமலை மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்கள். அண்ணாமலை வார் ரூம் வைத்து மூத்த பாஜக தலைவர்களை கேவலப்படுத்தி வருகிறார் என்றும் பெண்களை மிகவும் ஆபாசமாக பேச வைக்கிறார் என்றும் காயத்ரி குற்றம்சாட்டினார். அவரை தவிர வேறு யாரும் முன்னேறி விடக் கூடாது என்பதில் அண்ணாமலை குறியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நிர்மல் குமார்
இந்த நிலையில் நிர்மல் குமார் கூறுகையில் அண்ணாமலை தமிழக பாஜகவுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கே கேடு என குறிப்பிட்டிருந்தார். திமுக அமைச்சர் ஒருவருடன் தான் சட்ட போராட்டம் நடத்தினால் அதன் பின்னால் திரைமறைவில் அந்த அமைச்சருடன் அண்ணாமலை பேரம் பேசுகிறார் என கடுமையாக விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications