உதயநிதியை அரசியல் வாரிசா போடுங்க? போட்டு உடைத்த கரு.பழனியப்பன்! என்ன நடக்குது?
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது மகனை அரசியல் வாரிசாக அறிவிக்க வேண்டும் என்றும் வெளிப்படையாக ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். கட்சியில் மூத்த தலைவர்களே அது குறித்து வாய் திறக்காத நிலையில் இவர் பூசி மெழுகாமல் விசயத்தைப் போட்டு உடைத்துள்ளார்.
திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை அந்தக் கட்சி மிக விமர்சையாகக் கொண்டாடி வருகின்றது. பல இடங்களில் பொதுக்கூட்டங்கள், நூல் வெளியீடுகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சென்னை வேளச்சேரியில் ஒரு கருத்தரங்கக் கூட்டம் நடைபெற்றது.

அதில் பங்கேற்று பேசிய இயக்குநர் கரு. பழனியப்பன், எப்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பதவியேற்பார் என்பதற்காக விளக்கத்தை முன்வைத்து பேசிய விசயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கூடவே அவர் ஸ்டாலின் தனது மகனை அரசியல் வாரிசாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் பேசி இருக்கிறார்.
அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், "திமுக இந்த மக்களவைத் தேர்தலில் குறைந்தது ஒரு தொகுதிக்கு 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அப்படி என்றால் மொத்தம் 40 தொகுதிக்கும் சேர்த்து 89 லட்சம் வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. இவ்வளவு பெரிய வெற்றியை எவராலும் ஒப்புக்கொள்ள முடியாததால்தான், அத்தனை பேருடைய பார்வையும் தமிழ்நாட்டை நோக்கித் திரும்பியுள்ளது.
அதை மறந்துவிடக்கூடாது என்றுதான் கலைஞர் செய்ததை அவருக்கு முன்னால் அண்ணா செய்ததை அதற்கு முன்னால் பெரியார் செய்ததைத் திரும்பத் திரும்ப திமுகவினர் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படிச் சொல்வதற்கான வரலாறு திமுகவிடம் உள்ளது. மற்ற கட்சிகளிடம் அப்படி ஒரு வரலாறு இல்லை.
தமிழ்நாட்டில்தான் பெண்கள் அதிகம் படிக்கிறார்கள் என்று நாம் சொன்னால், உடனே ஒளவையார் படிக்கவில்லையா? என்று கேட்கிறார்கள். ஆமாம், ஒளவையார் படித்தார். ஏன் அதற்குப் பின்னால் வந்த என் அப்பத்தா படிக்கவில்லை? 1960களுக்கு முன்னால் பிறந்த பெண்கள் யாரும் அதிகம் படிக்கவில்லையே ஏன்? அதன் பின்னால் வந்த திமுக ஆட்சியில்தான் பெண்கள் கல்வி உரிமை பெற்றார்கள். இடையில் பெண்களைப் படிக்கவிடாமல் தடுத்தது யார்?
தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் 10 ஆம் வகுப்பு முடித்து 12 ஆம் வகுப்புக்கு முன்னேறுவதை நாம் படித்தது என்று ஏற்றுக் கொள்வதில்லை. 12 ஆம் வகுப்பு முடித்து பி.ஏ., பி.காம்., போவதைக் கூட நாம் படித்ததாக சொல்லவில்லை. எம்.ஏ., எம்.எஸ்.சி என முதுகலைப் பட்டம் பெறுவதைக் கூட நாம் பெரிய கல்வி அறிவு பெற்றுவிட்டதாகச் சொல்லவில்லை. பிஹெச்டி என்ற முனைவர் பட்டம் பெண்கள் பெறுவதைத்தான் கல்வியாக நாம் கணக்கிடுகிறோம்.
இந்தியாவில் பிஹெச்டி படிக்கும் 100% பெண்களில் 52% பெண்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளனர். மீதம் உள்ள 48% பெண்கள் அனைத்து மாநிலங்களிலிருந்தும் படிக்கிறார்கள். அதுதான் உண்மையான புள்ளிவிவரம்.
இந்தளவுக்குப் பெண்கள் உயர்கல்வி பெறுவதால்தான் ஊக்கத்தொகையை திமுக அரசு கொடுத்துக் கொண்டே இருக்கிறது. உடனே பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே பணம் கொடுக்கிறீர்களே என்று முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்ததால், இந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஆண்களுக்கும் தருவேன் என்று அறிவித்துள்ளார்.
அவர் ஆட்சியில் ஆண், பெண் வித்தியாசம் இல்லை. ஆண் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்றால், அதற்கும் பணம் தர அவர் முன்வருகிறார். இப்போது 40 தொகுதிகள் ஜெயித்துவிட்டார். அடுத்து 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளார். அவர் தொடர்ந்து நாகரிகமான அரசியல் நடத்தி வருகிறார்.
ஏன் கடுமையாக நடந்து கொள்ள மாட்டேன் என்கிறார். ஏன் கையில் சாட்டையை எடுக்க மாட்டேன் என்கிறார். நான் கூட நினைப்பேன் ஏன் கொஞ்சம் இறங்கி விமர்சிக்கலாமே என்று. இந்த எண்ணவோட்டம் பொதுவாகக் கட்சிக்குள் இருக்கிறது. அப்படித்தான் நான் நினைக்கிறேன்.
ஆனால், அதற்கு நிறையப் பேர் இருக்கிறார்கள். எனவே அவர் ஒருவராவது நாகரிக அரசியல் செய்யட்டும். நாம் அதை வரவேற்போம். ஆனால், முதல்வர் ஸ்டாலின் என்ன நினைக்கிறார் என்பதைக் கடைக்கோடி தொண்டர் உணர வேண்டும். அப்படி உணர வேண்டும் என்றால் ஸ்டாலின் தனது மனசாட்சியாக உதயநிதியை அறிவிக்க வேண்டும்.
பல ஊடகங்கள் உதயநிதியை துணை முதல்வராகப் போடப் போகிறார் என்று எழுதி வருகின்றன. ஆனால், முதல்வர் மவுனமாக இருக்கிறார். துணை முதல்வராக உதயநிதியைப் போடுவதா? வேண்டாமா? என்பது எங்கள் கட்சி பிரச்சினை? ஆனால். இவர்கள் ஏன் கவலைப்படுகிறார்கள் என்பதே புரியவில்லை.
முதல்வர் ஸ்டாலினை அனைவராலும் நெருங்க முடியாது. அந்த இடத்தில் ஒருவர் தேவை. தலைவர் என்ன நினைக்கிறார் என்பதை எடுத்துச் சொல்ல ஒரு மனசாட்சி தேவை. கலைஞர் ஒரு கட்டத்திற்குப் பின்னால், தனக்குப் பின்பு இவர்தான் என்று அடையாளம் காட்டினார். அப்படி ஸ்டாலினும் காட்ட வேண்டும்.
அப்படி ஸ்டாலினின் மனசாட்சியாக உதயநிதி அறிவிக்கப்பட்டால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234க்கு 200 என்பது மிகமிக எளிதாகிவிடும்" என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications