"ஆன்மீக அரசியல்" .. விஜய்யை பாராட்டி விட்டு போறபோக்கில் கோர்த்துவிட்ட கரு பழனியப்பன்!
சென்னை: நடிகர் விஜய் இன்று தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று சாதித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய போது பேசிய பேச்சை பலரும் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜய்யின் பேச்சை இயக்குநர் கரு.பழனியப்பன் வரவேற்றுள்ளார்.
தமிழகத்தில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வு சென்னை நீலாங்கரையில் நடந்தது.

நடிகர் விஜய் விழா மேடையில் பேசும் போது வழக்கம் போல் "என் நெஞ்சில் குடியிருக்கும்" என பேச்சைத் தொடங்கினார். அத்துடன் "நிறைய இசை வெளியீட்டு விழா மேடைகளில் நான் பேசியுள்ளேன். ஆனால், இந்த மாதிரியான மேடைகளில் நான் பேசியதில்லை. ஏதோ, மனதில் புதிய பொறுப்புணர்ச்சி வந்த மாதிரி இருக்குது.
வருங்கால இந்தியாவின் இளம் நட்சத்திரங்களாகிய உங்களை (மாணவர்கள்) சந்திப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. உங்களை பார்க்கும் போது எனக்கு என்னுடைய பள்ளிப் பருவ காலங்கள்தான் நியாபகத்தில் வந்து போகிறது. நான் ஒரு ஜஸ்ட் பாஸ் மாணவன் மட்டுமே. என்னுடைய கனவு சினிமாதான்.
"இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யக் காரணமே சமீபத்தில் நான் கேட்ட ஒரு படத்தின் (அசுரன்) வசனம் தான். 'காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது'. அதுதான் அந்த வசனம். இது நூற்றுக்கு நூறு உண்மை மற்றும் யதார்த்தம்.
அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது கல்வி. அதற்கு எனது தரப்பில் ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினேன். அதற்கான நேரம் தான் இது. ஆசிரியர்கள், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் போலி செய்திகள் அதிகம் இருக்கின்றன. பரந்து விரிந்துள்ள சமூக வலைதளம் அதற்குக் காரணம். அதனால் சிந்திக்கும் திறன் நாம் கற்கும் கல்வியைக் கடந்தும் இருக்க வேண்டும். நிறைய படிங்க. அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து படிக்கலாம்.
நீங்கள்தான் (மாணவர்கள்) நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க உள்ளீர்கள். பணம் வாங்கிவிட்டு வாக்களிப்பது என்பது, நமது கண்களை நாமே குத்திக் கொள்வது போன்றுதான்.
ஒருவர் ஒரு வாக்குக்காக ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம். ஒரு தொகுதிக்கு 15 கோடி ரூபாய் செலவழித்தால், அந்த அரசியல்வாதி அதற்கு முன்னாள் எவ்வளவு சம்பாதித்திருக்க வேண்டும்? என்று விஜய் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தங்களது பெற்றோரிடத்தில், இனி பணம் வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்காதீர்கள் என கூறிப் பாருங்கள். நீங்கள் சொன்னால் அது நிச்சயமாக நடைபெறும்.
பணத்தை இழந்தால் அதில் இழப்பு ஏதும் இல்லை. ஆரோக்கியத்தை இழந்தால் ஏதோ ஒன்றை இழக்கிறோம். ஆனால், குணத்தை இழந்தால் அனைத்தையும் இழக்கிறோம். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இவ்வளவு நாள் வரை பெற்றோர் உடன் இருந்து வந்த நீங்கள், படிப்புக்காக வேறு இடத்திற்கு செல்ல வேண்டி இருக்கும். அந்த சுதந்திரத்தை கவனத்துடன் கையாள வேண்டும். நம்முடைய வாழ்க்கை நம் கையில தான் இருக்கிறது" என்று விஜய் கூறினார். நடிகர் விஜய்யின் பேச்சை அனைத்து கட்சியினரும் பாராட்டி வருகிறார்கள். நடிகர் விஜய்யின் பேச்சு தான் இன்றைக்கு தமிழகத்தில் பேசு பொருளாக உள்ளது.
இந்நிலையில், கரு.பழனியப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில், "விஜய்யின் இன்றைய பேச்சு வரவேற்புக்குரியது. ஆன்மிக அரசியல் என்று சொல்லாமல், அம்பேத்கர் பெரியார் காமராஜரை படியுங்கள் என்றார். அதைப் படித்தாலே அவர்கள் சரியாக வாக்களித்துவிடுவார்கள்... நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications