யாரும் வர வேண்டாம்! இனிப்பு வேண்டாம்! அண்ணா அறிவாலயத்துக்கு ஸ்டாலினிடமிருந்து சென்ற தகவல்!
சென்னை: கருணாநிதி பிறந்தநாளின் போது வழக்கமாக கொடுக்கப்படும் இனிப்பை கூட இந்தாண்டு கொடுக்காமல் தவிர்த்திருக்கிறது திமுக தலைமை.
காரணம் கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இன்றைய தினம் இனிப்புகளை பகிர வேண்டாம் என முதல்வர் ஸ்டாலினிடமிருந்து சென்ற மெசேஜ் தான்.
கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று தொடங்கும் நிலையில் அதனை மிகவும் எழுச்சியோடு கொண்டாட திட்டமிட்டிருந்தது திமுக தலைமை. தமிழகம் முழுவதும் இருந்தும் திமுக முக்கியப் பிரமுகர்கள் சென்னையில் முகாமிட்டு கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு நிகழ்ந்த கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி 35 தமிழர்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த துயர நிகழ்வு முதல்வர் ஸ்டாலினை மனதளவில் பாதிக்கச் செய்திருக்கிறது. இதையடுத்து தான் திமுக பொதுக்கூட்டம் ரத்து, ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுகவினர் 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் திமுக தலைமைக்கழகத்தால் வெளியிடப்பட்டன.
அதேபோல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சி சார்பிலும், அண்ணா சாலையில் உள்ள கருணாநிதி சிலைக்கு அரசு சார்பிலும் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தும் நிகழ்வுக்கு, கட்சியினர் யாரும் பெருமளவில் வரவேண்டாம் என ஸ்டாலினிடமிருந்து தகவல் சென்றிருக்கிறது.
அதேபோல் தொண்டர்களுக்கு வழங்குவதற்காக வாங்கப்பட்ட இனிப்புகளை கூட பகிர வேண்டாம் என அறிவாலயத்துக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு துயரமாக தருணத்தில் கூட திமுகவினரின் கொண்டாட்டங்களை பாருங்கள் என சமூக வலைதளங்களில் யாரும் சர்ச்சையை ஏற்படுத்துவார்கள் என்பதால் இனிப்புக்கு தடை போட்டுவிட்டார் ஸ்டாலின்.
மொத்தத்தில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை மிகவும் எளிமையாக அவரது சிலைக்கு மாலை அணிவித்ததோடு முடித்துக் கொண்டார் ஸ்டாலின். இன்றைக்கு பதில் இந்த வாரத்தில் ஏதேனும் ஒரு நாள் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications