தென் தமிழ்நாட்டின் அறிவுத் திருக்கோயிலாக மதுரையில் நூலகம்! 6 தளங்களில் லட்சக்கணக்கான புத்தகங்கள்!
சென்னை: தென் தமிழ்நாட்டின் அறிவுத் திருக்கோயிலாக மதுரையில் கட்டப்பட்டுள்ள ''கலைஞர்'' நூற்றாண்டு நூலகம் திகழும் என முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
6 தளங்களில் என்னென்ன பிரிவுகளில் புத்தகங்கள் இடம்பெற்றிருக்கிறது என்பது குறித்தும் நூலகத்தின் கட்டுமான தகவல் பற்றியும் திமுக தொண்டர்களிடம் பகிர்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதன் விவரம் வருமாறு;

''ஜூலை 15-ஆம் நாள், தமிழ் நகராம் மாமதுரையில் உலகத் தரத்திலான கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்க இருக்கிறேன். 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு 120 கோடியே 75 இலட்ச ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், செய்தி-நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு அமைந்துள்ளன. ''
''தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டு கூடம், ஓய்வறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. முதல் தளத்தில் கலைஞர் பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள் - பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. ''
''இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவு எனச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளன. நான்காவது தளத்தில், எதிர்காலக் கனவுகளுடன் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர் மற்றும் இளைஞர்களின் கனவு நனவாகும் வகையில் ஏறத்தாழ 30 ஆயிரம் புத்தகங்களுடனான பகுதி அமைக்கப்பட்டுள்ளது. ''

''ஐந்தாவது தளத்தில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் தருவதற்கான பகுதி உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆறாவது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன. உள்கட்டமைப்புகள் கண்களை விரியச் செய்யும் வகையில் வியக்க வைக்கின்றன.''
''அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மனதில் கொண்டு, மதுரை மாநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைச் சிறப்பாக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எதிலும் வல்லவர் எனப்படும் எ.வ.வேலுவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இளைஞர்களின் நெஞ்சமறிந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.''












Click it and Unblock the Notifications