"B டீமுல" அப்படித்தான்.. என்னது அறிவாலயத்திலா.. "சீமானே, சீறாதே" அரசியலுக்காக.. சொல்றது யார் பாருங்க
நாம் தமிழர் கட்சி சீமானின் பேச்சுக்கு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது
சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு பேனாவில் சிலை வைக்க வேண்டும் என்று மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம், ஆதரவு தெரிவித்துள்ளதுடன், நாம் தமிழர் கட்சி சீமானுக்கும் பதிலடி தந்துள்ளது.
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டி கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக விவகாரம் வெடித்துள்ளது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடத்தி வரும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெரும் மோதலும் சலசலப்பும் நேற்றைய தினம் ஏற்பட்டது.

புதைக்க விட்டதே தப்பு
கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெரும்பாலான திமுகவினரும் கூடியிருந்தனர். இந்த கூட்டத்துக்கு சீமானும் வரப்போவதாக சொல்லியிருந்ததால், நாம் தமிழர் கட்சியினரும் திரளாக வந்திருந்தனர். பேனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் பேசும்போதே, கூட்டத்திற்கு வந்திருந்த திமுகவினர் கூச்சலிட்டு, அவரை பேச்சை நிறுத்தும்படி சொன்னார்கள்.. அப்போது சீமான், "உனக்கு எதைப் பற்றி அக்கறை இருந்திருக்கிறது? கடற்கரையில் புதைக்கவிட்டதே தவறு. இதில் பேனா நினைவுச் சின்னம் வேறு வைக்க வேண்டுமா? வேணும்னா, அறிவாலயத்தில் போய் வையுங்கள்... நினைவிடம் கட்டியிருக்கிறீர்களே, அதில் வையுங்கள், கடலுக்குள்தான் வைப்பார்களாம்.

வந்து உடைக்கிறேன்
சும்மா மீனவ சங்கம் என்ற பெயரில், அனைத்து மீனவ சங்கம், அகில இந்திய மீனவ சங்கம் என்ற பெயரில் இங்கு வந்துவிட்டு இதனால் ஒன்றும் பாதிப்பில்லை என்று எதையாவது பேசிக்கிட்டு. நீங்கள் பேனா வையுங்கள், ஒருநாள் நான் வந்து உடைக்கிறேன். பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை, பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது? நீ போகச் சொன்னால் நான் போய்விடுவேனா? நாங்கள் கடலுக்குள் பேனா வைப்பதை எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம். எனவே அதைத் தடுத்து நிறுத்தும் வரை கடுமையான போராட்டம் நடத்துவோம். இது உறுதி" என்று திடமாக சொல்லிய சீமான், சிலை வைத்தால், நான் வந்து உடைப்பேன் என்றும் கூறியிருந்தார்.

சுப வீரபாண்டியன்
சீமானின் இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் தங்கள் கருத்தை கூறிவருகிறார்கள்.. இருக்கிற நிதிநெருக்கடியில், பேனா நினைவு சின்னம் அமைக்க, பொதுமக்களின் வரிப்பணத்தை செலவழிப்பது உகந்ததா? என்று விகே சசிகலா காட்டமாக கேட்டிருந்தார்.. பாஜக பின்னால் இருக்கும் துணிச்சலில்தான், சீமான் பேச்சில் இவ்வளவு திமிர் வெளிப்படுகிறது. திமிரை அடக்கியே தீர வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் சுப.வீரபாண்டியன் ஆவேசமாக கூறியிருந்தார்.. அந்தவகையில், மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம், கருணாநிதிக்கு பேனாவில் சிலை வைக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளதுடன், சீமானுக்கும் பதிலடி தந்துள்ளது..

சீற்றம் சீமான்
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேனா"வே எதிர்கால பேரன்களுக்கு பேரும் புகழும் அள்ளித்தரும்.. "பேனா"வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அடாவடி அரசியல் பேசுவது, அனைத்து மக்களுக்கும் அழிவை தரும். "எழுத்தாணி" கொண்டு எழுதியவருக்கு, குறளலவு குமரியிலே சிலைகண்ட கலைஞரின் "மை பேனாவை" மறக்காமல் மெரினாவிலே, மதராஸிலே வைப்பதினால், உன் மகனும், பேரனும் பார்ப்பதினால், "வாய்ச்சொல்" ஆயுதத்தை விட, "பேனா எழுத்து சொல்" வலிமையானதை உணர்வார்கள். அதற்காக மை பேனா, மதராஸிலே, மெரினாவிலே வேண்டும் வேண்டும். சீமானே அரசியலுக்காக சீற்றம் கூடாது என்று செல்லப்பாண்டியன் காட்டமாக கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications