கரூரில் அழுததால் விமர்சனம்.. கல்லை கடவுளாக்க தெரிஞ்ச மனுஷனுக்கு.. அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி
சென்னை: கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பலியான சம்பவத்தின் போது மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உயிரிழந்த குழந்தைகளின் உடல்களைப் பார்த்து கதறி அழுதார். இந்நிலையில், அன்பில் மகேஷை தமிழக வெற்றிக் கழகத்தினர் சமூக வலைதளங்களில் எதிர்மறையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில், ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதனுக்கு, தன்னை மனிதனாக மாற்ற மறந்து விட்டான் என தன்னை விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கரூரில் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 5 சிறுவன்கள், 5 சிறுமிகள், 17 பெண்கள், 12 ஆண்கள் அடக்கம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் ஹேமலதா, மகள்கள் சாய் லசஷனா, சாய் ஜீவா ஆகிய மூவரும் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தரப்பிலும் முழு வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.

கரூர் கூட்டநெரிசல்
இதற்கிடையே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனடியாக கரூர் விரைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அங்கு சிகிச்சையில் இருந்தோரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அன்பில் மகேஷ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வெளியே வரும்போது, கண்ணீர்விட்டு அழும் காட்சிகள் பெரும் சோகத்தை உண்டாக்கின. செந்தில்பாலாஜி உள்ளிட்ட அங்கிருந்த பலரும் தங்களின் துயரத்தை வெளிப்படுத்தினர்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இந்நிலையில், அன்பில் மகேஷை தமிழக வெற்றிக் கழகத்தினர் சமூக வலைதளங்களில் எதிர்மறையாக விமர்சித்து வந்தனர். அதற்கும், ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதனுக்கு, தன்னை மனிதனாக மாற்ற மறந்து விட்டான் என தன்னை விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் "தமிழ் முழக்கம்" மேடைப்பேச்சு - ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்க தொடக்க விழா நடைபெற்றது.
அமைச்சர் பதில்
அக்டோபர் 22 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் பன்னாட்டு பயிலரங்க தொடக்க விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். விழாவிற்கு பின்னர் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அளித்த பேட்டியில் "பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, பள்ளிகளில் மின் கசிவுகள் ஏதும் உள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் விடுமுறை அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என கூறினார்.
கரூர் சம்பவம்
இதனை தொடர்ந்து கரூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழுத வீடியோ காட்சிகளுக்கு தமிழக வெற்றிக்கழகத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து பேசுவது குறித்த கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்து பேசுகையில் "உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும்,. இது பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றி இருந்தால் விலங்குக்கு சமமானது. அறிவு அதிகமாகி உணர்ச்சிகள் குன்றி இருந்தால் மரத்திற்கு சமமானது என வள்ளுவர் கூறியுள்ளார். முதலில் நாம் மனிதர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதனுக்கு தன்னை மனிதனாக்க தெரியாமல் மறந்து விட்டான்" என கூறினார்.












Click it and Unblock the Notifications