ஒரே ஊர்க்காரர்கள்! செந்தில்பாலாஜியை பார்க்க சென்ற ஜோதிமணி எம்.பி.! திருப்பி அனுப்பிய போலீஸ்!
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்த்து நலம் விசாரிப்பதற்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்ற கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை, போலீஸார் அனுமதி மறுத்து திருப்பி அனுப்பிவிட்டனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளார். இந்தச் சூழலில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, ஒரே ஊர்க்காரர்கள் என்ற அடிப்படையில் செந்தில்பாலாஜியை நலம் விசாரிக்கச் சென்றார்.

புழல் சிறை பதிவேடு எண் கொடுக்கப்பட்டு சிறைத்துறை பாதுகாப்பில் அவர் இருந்து வருவதால் பார்ப்பதற்கு அனுமதி தர இயலாது என ஜோதிமணி எம்.பி.யிடம் போலீஸார் தெரிவித்துவிட்டனர். இருப்பினும் அங்கிருந்த காவல் ஆய்வாளரிடம் எடுத்துக்கூறி லிஃப்டில் ஏறி மாடி வரை சென்றும் அவருக்கு செந்தில்பாலாஜியை பார்க்க அனுமதி தரப்படவில்லை.
பிறகு தாம் வந்து சென்ற தகவலை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் தெரிவிக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் ஜோதிமணி. இவருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இடையே அரசியல் ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

ஒரு காலத்தில் இருவரும் இணைந்து அரசியல் செய்து வந்த நிலையில், கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தனக்கு திமுகவினர் உரிய மரியாதை தரவில்லை என கொதித்தெழுந்தார் ஜோதிமணி.
இதனிடையே பழைய மனக்கசப்புகளை மறந்து ஒரே ஊர்க்காரர் என்ற அடிப்படையில் அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்த்து நலம் விசாரிக்க ஓடோடி வந்து போலீஸார் போட்ட முட்டுக்கட்டையால், ஏமாற்றத்துடன் திரும்பினார் ஜோதிமணி.












Click it and Unblock the Notifications