விடைபெற்ற அஸ்ரா கார்க்..சிபிஐ கைக்கு போன கரூர் கேஸ்! கோர்ட்டில் கொடுக்கப்பட்ட ஆவணங்கள்! அடுத்த மூவ்?
சென்னை: நடிகர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இதுவரை நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கை, ஆவணங்களை கரூர் நீதிமன்றத்திடம் தமிழக அரசின் சிறப்பு புலனாய்வு குழு ஒப்படைத்துள்ளது. மேலும் இந்த விசாரணை குழுவில் இருந்தும் அஸ்ரா கார்க் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் நீதிமன்ற தீர்ப்பையடுத்து தானாகவே விலகியுள்ளனர். விரைவில் இந்த ஆவணங்கள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், தமிழ்நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த நிகழ்வில் 41 பேர் உயிரிழந்ததோடு, 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த பேரவலம் தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கூட்ட நெரிசல் விபத்துகளில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்துக்கான காரணங்களை வெளிக்கொணர தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

கரூர் கூட்ட நெரிசல்
அதனுடன், கரூர் போலீசார் த.வெ.க. நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரை கைது செய்தனர். இதற்கிடையே அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோக்களுக்கு தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் அமைக்கப்படும்வரை அவற்றுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட்டார்.
சிறப்பு புலனாய்வு குழு
இதில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் உள்ளிட்ட அதிகாரிகள் இடம்பெற்றனர். மேலும், இதுவரை விசாரணை செய்திருந்த போலீஸ் அதிகாரி ஏ.டி.எஸ்.பி. பிரேம் ஆனந்த் சேகரித்த அனைத்து ஆவணங்களும் மற்றும் ஆதாரங்களும் உடனடியாக புதிய விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த உத்தரவையடுத்து, ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு கரூரில் சம்பவம் நடந்த இடமான வேலுச்சாமிபுரம் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டது. தொடர்ந்து விஜய் இடமும் விசாரணை நடத்தப்படலாம் என சொல்லப்படும் நிலையில், வழக்கு சிபிஐ வசம் சென்றது.
ஆவணங்கள் ஒப்படைப்பு
இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு தானாகவே கலைக்கப்பட்டதோடு அதிலிருந்து விசாரணை அதிகாரிகளும் விலக்கப்பட்டனர். மேலும் இதுவரை கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக திரட்டப்பட்ட ஆவணங்கள், வாக்குமூலங்கள், அறிக்கை உள்ளிட்டவற்றை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. இதை அடுத்து சிறப்பு புலனாய்வு குழுவால் இதுவரை விசாரிக்கப்பட்டவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் வழக்கு தொடர்பான ஆவணங்கள் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவால் ஒப்படைக்கப்பட்டது.
சிபிஐ விசாரணை
தொடர்ந்து ஆவணங்களை பெற்றுக் கொண்டதாக நீதிமன்றம் ஒப்புகை அளித்துள்ளது. இந்த நிலையில் கரூர் விவகாரம் தொடர்பாக மதுரையில் இருக்கும் சிபிஐ அலுவலகம் மூலமாக அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை புறப்பட்ட ஆவணங்களை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என சிபிஐ விரைவில் கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், ஆவணங்கள் கிடைத்தவுடன் உடனடியாக விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications