கரூர் கூட்ட நெரிசல்.. பனையூர் தவெக அலுவலகத்தில் விசாரிக்க திட்டம்? அதிரடி ஆக்ஷனில் இறங்கும் சிபிஐ
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கடந்த சில நாட்களாக, சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நவீன கருவிகளை கொண்டும் சிபிஐ அதிகாரிகளின் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். சம்பவம் நடந்த கரூர் வேலுசாமிபுரத்தில் சிபிஐ அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். கடந்த 17 ஆம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது ஆழமான விசாரணையை துவங்கியுள்ளனர்.
நேற்று முன் தினம் காலை சாட்சியங்களை, அலுவலகத்திற்கு வரவழைத்தும், பின்னர் சாட்சியங்களில் 3 பேரை மட்டும், சம்பவ இடத்துக்கே அழைத்து வந்தும் சிபிஐ அதிகாரிகள் நேரடியாக விசாரணை செய்தனர். கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணிடமும் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். இதேபோல், வேலுச்சாமிபுரம் பகுதியிலுள்ள பொதுமக்கள், வியாபாரிகளிடம் சாட்சியங்கள் பெறுவதற்காக சம்மன் அனுப்பியிருந்தனர்.
விஜய்யின் பனையூர் அலுவலகத்தில்
தொடர்ந்து விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அடுத்த கட்டமாக பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யின் பிரச்சார வாகனம் மற்றும் அந்த வாகனத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
கடை வியாபாரிகள் விளக்கம்
முன்னதாக கரூர் பிரச்சார கூட்டத்தில் என்னதான் நடந்தது? கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம் என்பது குறித்து உண்மை தகவல்கள் தெரிந்திருப்பின் நேரில் ஆஜராகி சொல்லும் படி அங்குள்ள கடை வியாபாரிகள், பொதுமக்களிடம் சிபிஐ அதிகாரிகள் கூறியிருந்தனர். அதன்பேரில் நேற்று முன் தினம் 4 பேர் விசாரணைக்கு ஆஜராகி நடந்ததை பற்றி தெரிவித்து இருக்கிறார்கள்.
இதேபோன்று கூட்டம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தார்கள். Faro focus என்ற 3D டிஜிட்டல் அதாவது நவீன லேசர் ஸ்கேனர் கருவியை மாதிரி படம் பிடிக்கும் கருவிகளை கொண்டு அளவீடு செய்தனர். அங்குள்ள மக்களும் டீக்கடை ஓனர்களும், கூட்டத்தின் அளவு, போக்குவரத்து நிலை, போலீஸ் ஏற்பாடுகள் போன்றவை குறித்து பதில் கூறியதாக சொல்லப்படுகிறது.
விஜய் அடுத்தக் கட்ட பிரசாரத்துக்கு தயார்?
இது ஒரு புறம் இருக்க தவெக தலைவர் விஜய் மீண்டும் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். திமன்ற வழிகாட்டுதலின் படி இன்னும் 10 நாட்களில் மீண்டும் தொடங்க இருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தொண்டர் அணியினருக்கு, தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் பயிற்சி வழங்க இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications