கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்.. நீதிபதியை விமர்சித்த ஓய்வு காவல் அதிகாரி வரதராஜன் கைது
சென்னை: தவெக தலைவர் நடிகர் விஜயின் பிரசாரத்தின்போது கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்துக்கு எதிராக அவதூறு பரப்பிய புகாரில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வரதராஜனை சென்னை சைபர் கிரைம் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.
கடந்த மாதம் 27 ம் தேதி நடிகரும், தவெக தலைவருமான நடிகர் விஜய் கரூர் வேலுச்சாமி புரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 50க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் தலைமறைவாக உள்ள நிலையில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கோரினர். அந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே தான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிடவில்லை. ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிடப்பட்டது. இந்த குழுவினர் 3 நாளாக இன்றும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி செந்தில் குமார், ‛‛விஜய்க்கு தலைமை பண்பு இல்லை'' என்பது உள்பட பல்வேறு கருத்துகளை கூறி விஜயை சாடியிருந்தார்.
நீதிபதியின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. தவெக உள்பட சிலர் நீதிபதியை விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பதிவுகளை செய்தனர். இதையடுத்து நீதிமன்றம், நீதிபதியை விமர்சனம் செய்வோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வரதராஜன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சென்னை சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்தனர். வரதராஜன், நேதாஜி மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார். மேலும் யூடியூப்களில் கருத்து தெரிவித்து வருகிறார். கரூர் விவகாரத்தில் அவர் நீதிபதியை விமர்சனம் செய்து கருத்து தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே நீதிபதி, நீதிமன்றத்தை விமர்சனம் செய்த இந்த விவகாரத்தில் சென்னை சைபர் கிரைம் போலீசார் 25க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்றைய தினம் புதுக்கோட்டையை சேர்ந்த கண்ணன், கிருஷ்ணகிரியை சேர்ந்த டேவிட், செங்கல்பட்டை சேர்ந்த அதிமுக ஐடி விங்கை சேர்ந்த சசிகுமார், தூத்துக்குடியை சேர்ந்த அந்தோணி சகாய மைக்கேல் ராஜ் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்திருந்தனர்.
அதற்கு முன்னதாக கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அரசை விமர்சனம் செய்த வழக்கில் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு யூடியூபர் மாரிதாஸை பிடித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி சம்மன் அனுப்பி விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications