உலகையே உலுக்கிய கரூர் துயரச் சம்பவம்.. சர்வதேச ஊடகங்களின் பார்வையில் TVK Vijay

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் துயரச் சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்தை சர்வதேச ஊடகங்கள் கவனப்படுத்தி உள்ளன. சர்வதேச ஊடகங்கள் இந்தச் சம்பவத்தை எவ்விதம் வெளியிட்டுள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.

தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை அன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். அதில் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும்,100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்றுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் நேற்று வரை 51 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி உள்ளனர்.

Karur Stampede Shocks the World Global Media Highlights the Tragic Incident

கரூர் கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. தவெகவின் ஏற்பாடு குறைபாடு, பாதுகாப்பு குறைபாடு என பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் சர்வதேச ஊடகங்கள் தமிழ்நாட்டில் நடந்த இந்தச் துயரச் சம்பவத்தை எப்படி செய்தியாக வெளியிட்டுள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.

The New York Times

தென்னிந்தியாவில் சனிக்கிழமை நடைபெற்ற ஒரு அரசியல் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்த மேடையை நோக்கி ஆயிரக்கணக்கானோர் திரண்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 12 ஆண்கள், 16 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் என 38 பேர் உயிரிழந்ததாக தமிழக காவல்துறை தெரிவித்திருக்கிறது. 51 வயதான ஜோசப் விஜய் சந்திரசேகர் பேசிக்கொண்டிருக்கும்போது ஆம்புலன்ஸ்கள் செல்ல சிரமப்படுவதைக் கண்ட நடிகர், தனது உரையை நிறுத்தி, ரசிகர்களுக்கு வழிவிடுமாறு கேட்டுக்கொண்டது வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

10,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி கேட்ட நிலையில், சுமார் 27,000 பேர் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்துக்கு நடிகர் வராததால், மக்கள் நீண்ட நேரம் தண்ணீர், உணவு இல்லாமல் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

Al Jazeera English

தென் மாநிலமான தமிழ்நாட்டில் பிரபல இந்திய நடிகரும் அரசியல்வாதியுமான ஒருவரின் பேரணியில் சனிக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாக மதிப்பிடப்படும் பேரணியில், விஜய் உற்சாகமான கூட்டத்தினரிடம் உரையாற்றும்போது, ​​அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் குழு அவரது பேருந்தை நெருங்க முயற்சிக்கும்போது விழுந்து நெரிசல் ஏற்பட்டதாக செய்தி வெளியிட்டன.

2024 ஆம் ஆண்டில், நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று, அரசியல் கட்சியை தொடங்கினார் விஜய். இந்தியாவில் அதிக மக்கள் கூடும்போது கூட்ட நெரிசல் ஏற்படுவது மிகவும் பொதுவானது. கடந்த ஜனவரி மாதம், மகா கும்பமேளாவின் போது பல்லாயிரக்கணக்கான இந்து பக்தர்கள் புனித கங்கையில் குளிக்க விரைந்ததால் குறைந்தது 30 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The Washington Post

இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் பிரபல இந்திய நடிகரின் அரசியல் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதார அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இறந்தவர்களில் 9 குழந்தைகளும் அடங்குவர். மருத்துவமனைகளில் குறைந்தது 124 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

BBC World Service

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் நடந்த ஒரு அரசியல் பேரணியில் ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது 40 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், 'ஒன்பது குழந்தைகள், 17 பெண்கள் மற்றும் 13 ஆண்கள் அடங்குவர். மேலும் 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்' என்றார்.

விஜயின் தவெக கட்சியின் மூன்று மூத்த உறுப்பினர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 10,000 பேர் கொண்ட கூட்டத்திற்கு அனுமதி கோரியது, ஆனால் உண்மையான கூட்டம் இரு மடங்கிற்கும் அதிகமாக இருந்தது என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்திருக்கிறது.

பல மணி நேரம் தாமதமாக விஜய் வந்ததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகமானது எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் நெரிசல்கள் அசாதாரணமானவை அல்ல. இந்த ஆண்டு மட்டும் இதேபோன்ற பல துயர சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் பிரபலமானது கும்பமேளா மற்றும் ஒரு கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே நடந்த சம்பவமும் அடங்கும்.

South China Morning Post

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் நடிகர் விஜய் நடத்திய பேரணியில் சனிக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டனர். 50 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2026 சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு, தமிழ் சினிமாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகர்களில் ஒருவரான விஜய், 2024-ம் ஆண்டு தனது அரசியல் கட்சியைத் தொடங்கினார். தனது பொதுக் கூட்டங்களுக்குப் பெரும் கூட்டத்தை ஈர்த்துள்ளார்.

விஜய் மதியத்திற்குள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருவார் என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, மக்கள் பல மணி நேரம் கடும் வெயிலில் காத்திருந்ததாகவும், போதுமான உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் இருந்ததாகவும் மாநில காவல்துறை தெரிவித்திருக்கிறது.

விஜய்யின் பேரணிகள் பாதுகாப்பு குறித்த கவலைகளை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட அவரது அரசியல் கட்சியின் முதல் கூட்டத்திற்குப் பிறகு குறைந்தது ஆறு பேர் இறந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Arab News

இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் பிரபல இந்திய நடிகரும் அரசியல்வாதியுமான ஒருவரின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர் என்று மாநில சுகாதார அமைச்சர் சனிக்கிழமை இரவு தெரிவித்தார். இறந்தவர்களில் எட்டு குழந்தைகள் அடங்குவர். கடுமையான வெப்பத்திற்கு மத்தியில் விஜயின் ரசிகர்கள் காத்திருந்தனர்.

நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு தாமதமாக வந்த விஜய் கூட்டத்தினரிடம் பேசியபோது, ​​அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் குழு அவரது பேருந்தை நெருங்க முயன்றது. அப்போது நெரிசல் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மக்கள் மயக்கமடைந்து விழுவதைக் கவனித்த ரசிகர்கள் எச்சரிக்கை செய்தபோது, ​விஜய் தனது உரையை பாதியிலேயே நிறுத்திக்கொண்டார்.

தென்னிந்திய மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில், சில திரைப்பட நட்சத்திரங்கள் உயிர்களை விட உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். பண்டைய தமிழ் கலாச்சாரமான ஹீரோ வழிபாடு மற்றும் உருவ வழிபாட்டில் வேரூன்றியுள்ளனர். அவர்களின் ஹீரோக்கள் பலர் அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர். சிலர் தெய்வீக அந்தஸ்தும் பெற்றுள்ளனர்.

இந்தியாவில் அதிக மக்கள் கூடும் போது நெரிசல்கள் ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. ஜனவரி மாதம், உலகின் மிகப்பெரிய மதக் கூட்டமான மகா கும்பமேளாவின் போது பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் புனித நதியில் குளிக்க விரைந்த நெரிசலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர்.

Gulf News

சனிக்கிழமை இரவு கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடத்திய பேரணி சோகமாக மாறியது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குப் பின்னால் திமுகவின் சதி இருப்பதாக விஜய்யின் தவெக குற்றம் சாட்டியுள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க அல்லது வழக்கை மத்திய நிறுவனமான சிபிஐக்கு மாற்றுமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தும் மனுவுடன் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

நடிகர்-அரசியல்வாதி விஜய் தனது பேரணிக்கு வருவதில் ஏழு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால், தொண்டர்களின் கட்டுப்பாடற்ற உணர்வெழுச்சி நெரிசலுக்கு முக்கிய காரணம் எனக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

The Straits Times

தமிழ் நடிகர் விஜய்யின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, அவரது கட்சித் தலைவர்கள் மீது இந்திய காவல்துறை கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் குழந்தைகளும் பலியாகியுள்ளனர்.

தொழில்ரீதியாக விஜய் என்று அழைக்கப்படும் ஜோசப் விஜய் சந்திரசேகர், மாநில ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தையும், மோடியின் இந்து தேசியவாத கட்சியான பாரதிய ஜனதா கட்சியையும் எதிர்த்து கட்சி தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

The Korea Times

இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் பிரபல இந்திய நடிகரும் அரசியல்வாதியுமான ஒருவரின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதாக அதிகாரிகள் கூறும் பேரணியில், அரசியல்வாதியாக மாறிய நடிகர் ஒருவர் பிரசாரம் மேற்கொண்டார்.

சுமார் 5 மணி நேரம் தாமதமாக வந்த நடிகர் விஜய், நீண்ட நேரம் வெளியில் காத்திருந்தவர்களிடம் உரையாற்றத் தொடங்கினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் குழு அவரது பேருந்தை நெருங்க முயன்றபோது விழுந்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தின் ஒரு பகுதியில் அசாதாரண சூழ்நிலையை உணர்ந்த சிறிது நேரத்திலேயே, அவர் தனது உரையை முடித்துக்கொண்டார்.

தென்னிந்திய மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில், சில திரைப்பட நட்சத்திரங்கள் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளனர், பண்டைய தமிழ் கலாச்சாரமான ஹீரோ மீதான கண்மூடித்தனமான பக்தி மற்றும் உருவ வழிபாட்டில் வேரூன்றியுள்ளனர். அதனால் சிலர் அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர், சிலர் தெய்வீக அந்தஸ்தும் பெற்றுள்ளனர்.

இந்தியாவில் அதிக மக்கள் கூடும் போது நெரிசல்கள் ஏற்படுவது சகஜமாகிவிட்டது. ஜனவரியில், உலகின் மிகப்பெரிய மதக் கூட்டமான மகா கும்பமேளாவின் போது பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் புனித நதியில் குளிக்கச் சென்றபோது, 30 பேர் கொல்லப்பட்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+