Bussy Anand: ஒரு வாரமாக தலைமறைவு! புஸ்ஸி ஆனந்துக்கு ஜாமீன் கிடைக்குமா? உச்ச நீதிமன்றத்தில் முறையிட தவெக திட்டம்
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த இவர்களது மனுக்களை உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு இருவரும் இன்று முறையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக உள்ள புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த 27 ஆம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார்
இது தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீதும் வழக்கு போடப்பட்டது. இருவர்மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் கைது நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக இருவரும் தலைமறைவாக உள்ளனர். இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். வெள்ளிக்கிழமை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
விசாரணையில் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஒருவாரத்திற்கும் மேலாக தலைமறைவாக உள்ள நிலையில், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதையடுத்து, தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளனர்.
விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள
தங்களது மனுக்களை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும் இன்று நீதிமன்றத்தில் முறையிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது.
சிறப்பு புலனாய்வு குழு
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில், சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், உடனே சிறப்பு புலனாய்வுக் குழுவிடம், கரூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை தொடங்கியது. நேற்று சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். அப்போது கரூர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்சன், கரூர் தனிப்படை போலீஸ்காரர் மோகன் ஆகியோர் நடந்த சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் எடுத்துரைத்தனர்.
கரூரில் 45 நிமிடங்கள் ஆய்வு
பின்னர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அப்பகுதி மக்கள் என பலரிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தினர். மதியம் 1.30 மணி அளவில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடங்கப்பட்ட இந்த தீவிர விசாரணை 2.15 மணி வரை 45 நிமிடங்கள் நடந்தது. முன்னதாக ஐ.ஜி. அஸ்ரா கர்க் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றார். அங்கு போலீஸ் சூப்பிரண்டு ஜோஷ் தங்கையாவிடம் நெரிசல் சம்பவம் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து அஸ்ரா கர்க் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'நீதிமன்ற உத்தரவுப்படி கரூர் சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கி இருக்கிறோம். சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து உள்ளோம். விசாரணை விவரங்களை மேற்கொண்டு நானே சொல்கிறேன்' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications