கரூரில் களமிறங்கிய சிபிஐ.. அனாதையாகக் கிடந்த பென்-டிரைவ்! ‘அரசியல் புள்ளி’களை வளைக்கும் விசாரணை
கரூர்: கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், விசாரணை அதிகாரம் சிபிஐக்கு (CBI) மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணை அதிகாரிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக பணியை தொடங்கினர். இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆவணங்களை எரித்ததாக புகைப்படங்கள் பரவிய நிலையில், அங்கு கிடந்த பென்-டிரைவ் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியாயினர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்துக்குப் பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு கடந்த அக்டோபர் 5ஆம் தேதி கரூருக்கு வந்து, சம்பவ இடத்தை ஆய்வு செய்ததுடன், மின்வாரியம், மருத்துவம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல துறையினரிடம் விசாரணை நடத்தியது. மேலும், கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் இருவரை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தும் இருந்தது.

கரூர் தவெக கூட்டம்
இதற்கிடையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரிக்க 13ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையில், ஏடிஎஸ்பி முகேஷ் குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய சிபிஐ குழு கரூருக்கு வந்தது. அவர்கள் கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழுவின் ஏடிஎஸ்பி திருமால், வழக்குக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும், சாட்சிய விவரங்களையும் சிபிஐ அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தார்.
சிபிஐ விசாரணை
ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் முதற்கட்ட விசாரணை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளையில், சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தங்கி இருந்த கரூர் நீர்வள ஆதாரத் துறையின் அலுவலக வளாகத்தில் சில ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டிருப்பது நேற்று வெளிச்சத்துக்கு வந்தது.
ஆவண எரிப்பு விவகாரம்
அலுவலகத்தின் தெற்கு பகுதியில் மூன்று இடங்களில் ஆவண எரிப்பு நடந்ததாகவும், 32 ஜிபி திறன் கொண்ட ஒரு பென் டிரைவ் சேதமடைந்த நிலையில் கிடந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்ததைத் தொடர்ந்து, சேதமடைந்த பென் டிரைவை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைப்பற்றி ஆய்வு செய்ய எடுத்துச் சென்றனர். சிபிஐ விசாரணை தொடங்கியுள்ள நிலையில், இப்போது வழக்கு தொடர்பான அனைத்து சான்றுகளும், சாட்சியங்களும் மத்திய புலனாய்வுக் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது.
அரசியல்வாதிகளிடம் விசாரணை
இந்த வழக்கில் முக்கிய காரணங்கள், பாதுகாப்பு குறைபாடு மற்றும் நிர்வாக தவறுகள் ஆகியவற்றைத் தெளிவுபடுத்த சிபிஐ அதிகாரிகள் விரைவில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும், தவெக நிர்வாகிகளையும் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கான நீதி கிடைக்குமா என்ற எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், சில அரசியல் தலைவர்களிடமும் சிபிஐ விசாரிக்கும் என கூறப்படுகிறது. மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த அரசியல் புள்ளிகளும் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் வரலாம் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications