5300 ஆண்டுக்கு முன்பே தமிழ் மண்ணில் இரும்பு! ஸ்டாலின் முகத்தில் தமிழின பெருமிதம்: வைரமுத்து பூரிப்பு
சென்னை: தமிழகத்தில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் தொழில்நுட்பம் புழக்கத்தில் வந்துவிட்டது என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்ததற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இரும்பின் தொழில்நுட்பம்
5300 ஆண்டுகட்கு முன்பே
தமிழ்மண்ணில்
புழக்கத்திற்கு வந்துவிட்டது
என்ற பிரகடனத்தை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெளியிட்டபோது
அவர் குரலிலும் முகத்திலும்
தொனித்தது
ஒட்டுமொத்தத் தமிழினத்தின்
பெருமிதம் அல்லவா?
உலக ஆய்வகங்களின்
கதிரியக்கப்
பகுப்பாய்வுக்குப் பிறகு
இந்தத் தொன்மை
உண்மையென்று
உணர்த்தப்பெற்றுள்ளது
தீ இரும்பு சக்கரம் என்ற
கண்டுபிடிப்புகளே
மனிதகுல வரலாற்றை
வளைத்துத் திருப்பியவை

இதில் இரும்பின் இடம்
உறுதியானது
திருவள்ளுவர் இரும்பைப்
பொன் என்று சுட்டுகிறார்
"தூண்டில் பொன்
மீன்விழுங்கி யற்று" என்கிறார்
இந்தப் பெருமை
இந்திய நாகரிகத்துக்குத்
தமிழர் முன்னோடி என்பதை
உறுதிசெய்யும்
முதலமைச்சருக்கும்
இதன் பின்புலத்திலிருந்த
அறிவுப்புலத்தார்க்கும்
நல்வணக்கம் செலுத்தி
நன்றி சொல்கிறேன்
இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கிடைத்த தொல்லியல் மாதிரிகளை அமெரிக்கா, புனே, அகமதாபாத் ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்ததில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது. தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதை தமிழக தொல்லியல் துறை சார்பில் 'இரும்பின் தொன்மை' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மேலும் தமிழ் நிலத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகமாகிவிட்டது. இப்போது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் கிடைக்கப்பெற்ற காலக் கணக்கீடுகள், இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு. 4000-ம் ஆண்டின் முதற்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கு காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கீழடி அகழாய்வு தொடர்பான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
கி.மு. 3345 ஆம் ஆண்டிலேயே தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகி உள்ளதாக ஆய்வுகள் சொல்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வரலாறு இனி தமிழகத்தில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications