Stalin Vs EPS in CM Race: ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்த எடப்பாடி பழனிசாமி! கே.சி.பழனிசாமி பகீர்
சென்னை: வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஸ்டாலினை முதல்வராக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். அதே நேரத்தில் கட்சி மட்டும் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் போதும் என்றும் அவர் கருதுவதாக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக வாக்குகளை குறிவைக்கும் விஜய்யை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்க தயங்குவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் நடந்த ஒரு முக்கிய விவாதத்தை சுட்டிக்காட்டி கே.சி.பழனிசாமி, ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 2026ல் ஒன்றிணைந்த அதிமுக என்ற கனவு கலைந்ததா என்ற கேள்விக்கு, "அது ஒரு நல்ல முடிவாக எந்த ஒரு அதிமுக தொண்டனும் பார்க்கவில்லை. மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் முதலமைச்சராகும் நம்பிக்கை இல்லை. ஆனால் கட்சியையாவது தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைக்கிறார்" என்று விமர்சித்தார்.

தவெக நிலைப்பாடு
"விஜய் மற்றும் தவெக நிலைப்பாடு குறித்து அதிமுக இன்னும் தெளிவான முடிவுக்கு வராதது ஏன்?" என்று கேள்வி எழுப்பிய கே.சி.பழனிசாமி, "விஜய், அதிமுகவின் வாக்குகளை குறிவைக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அவரைப் பற்றி பேசத் தயங்குவது ஏன். சி.வி.சண்முகம் மாலை நேரத்தில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பேசுவார். அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்று சி.வி.சண்முகம் கூறுவது உண்மையல்ல.அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வல்லமையோடு இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.
பலம் குறைந்த பாஜக கூட்டணி
பாஜக கூட்டணிக்கு செல்லலாம் என்றால் தந்தை- மகனிடையே அதிகார மோதலால் பாட்டாளி மக்கள் கட்சி பிளவுபட்டு நிற்கிறது. தேமுதிக கடந்த முறையே ராஜ்யசபா சீட் தருவதாக கூறி ஏமாற்றியதாக கூறியிருந்தது. ஆனால் பிறகு அப்படி நாங்கள் சொல்லவே இல்லை என சொன்னதெல்லாம் வேறு விஷயம். எனவே, பாஜக மெகா கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை. அதன் பலம் குறைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி அமைவதைத்தான் விரும்புகிறார். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து நாலரை வருடங்கள் ஆகியும், அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
அண்ணாமலை என்ன செய்கிறார்
அண்ணாமலை குறித்து சிலர் தவறான கருத்துக்களை கூறுகிறார்கள். அண்ணாமலை உறவாடி கெடுப்பவர் இல்லை. அதிமுக கூட்டணிக்குள் இருந்து கொண்டே ஓபிஎஸ் போன்றவர்களை கூட்டிட்டு வர வேலை பார்க்கிறார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில், திராவிட கட்சியாக இருந்து கொண்டு நீதித்துறைக்கு எதிராக செயல்படுவது சரியா?. நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத அரசாங்கத்தை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும். அதில் அரசியல் கட்சிக்கு என்ன வேலை இருக்கிறது?" என காட்டமாக கே.சி. பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
அதிமுக ஒன்றிணைப்பு
2026-ஆம் ஆண்டுக்குள் எல்லாம் ஒன்றிணைந்திட முடியுமா என்ற கேள்விக்கு, "ஒன்றுபட வேண்டும் என்று நினைத்தால் ஒன்றிணைய வேண்டும். ஒன்றுபட்டால் வெற்றி சாத்தியம் என்று கே.சி.பழனிசாமி தெரிவித்தார். அதிமுக ஒன்றிணைப்பு சாத்திப்படாது என்று கருதியதால்தான் செங்கோட்டையன் , தவெகவுக்கு வந்ததாக பேட்டியில் தெரிவித்திருந்தார். அப்படியிருக்கும் கே.சி.பழனிசாமி சொல்வது நடக்குமா என தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இன்னும் 100 நாட்களில் தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications