உலக அளவில் கவனத்தைப் பெற்ற கீழடி... தமிழர்களின் அடையாளம் தேடி உலகம் முழுவதும் பயணம் - ஸ்டாலின்
இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்து தொடங்கிதான் எழுதப்பட வேண்டும். தமிழர் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி இனி உலகெங்கும் பயணம் செல்வோம் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது என சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கீழடி அகழாய்வு பணிகளை ஒன்றிய அரசு பாதியில் கைவிட்டது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்து தொடங்கிதான் எழுதப்பட வேண்டும். தமிழர் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி இனி உலகெங்கும் பயணம் செல்வோம் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சட்டசபையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ் சமூகம் கிமு ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சங்க இலக்கிய சமூகம் என்று தெரிவித்தது கீழடி தொல்லியல் ஆய்வு.

பண்டைய நாகரிகம் கொண்ட மண் தமிழ்நாடு என்பதற்கு தொல்லியல் சான்றுகள் உள்ளன; 1990ல் கடல்சார் ஆய்வுக்கு பெரும் திட்டம் தீட்டியதும், பூம்புகாரில் கடலுக்கு அடியில் சில கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டதும் கலைஞரால்தான் என்று கூறினார். வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை அமைத்தது, தமிழ் வாழ்க என எழுத வைத்தது, தமிழ் வழிபாட்டு உரிமை வழங்கியது, தமிழை கணினி மொழியாக்கியது, உலகம் முழுவதும் தமிழை பரப்பியது, செம்மொழி மாநாடு நடத்தியது என தமிழ் அரசை நடத்தியதுதான் திமுக அரசு என்றார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது .கீழடி அகழாய்வு பணிகளை ஒன்றிய அரசு பாதியில் கைவிட்டது.கீழடியில் கிமு நான்காம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த வெள்ளிக்காசு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அகழாய்வு நடைபெறும் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சிவகளையில் கண்டெடுத்த முதுமக்கள் தாழியில் இருந்து நெல்மணிகள் காலம் கி.மு.1155 என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்தார்.

கொற்கை துறைமுகம் கிமு ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பொருநை ஆற்றங்கரையில் நாகரீகம் 3700 ஆண்டுகள் பழமையானது என அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அகழாய்வு பணிகளுக்கு ரூபாய் 5 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் நெல்லை நகரில் ரூபாய் 15 கோடியில் நவீன வசதிகளுடன் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
கேரள மாநிலம் பட்டணம் ஆந்திராவில் வேங்கி, கர்நாடகாவில் தலைக்காடு, ஒடிசாவில் பாலூர் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்து தொடங்கிதான் எழுதப்பட வேண்டும்.தமிழர் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி இனி உலகெங்கும் பயணம் செல்வோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடல் கடந்தும் ஆய்வு நடைபெறும் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், எகிப்து, ஓமன், இந்தோனேஷியா, தாய்லாந்து,மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் தமிழர்களின் அடையாளங்களைத் தேடி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications