விண்ணுலகம் சென்றாலும், மண்ணுலகில 4 பேருக்கு உயிர் கொடுத்த 10 மாத கேரள குழந்தை.. நெகிழும் மக்கள்
கோவை: கேரளாவைச் சேர்ந்த அருண்-ஷெரின் தம்பதி, தங்கள் கைக்குழந்தை ஆலின் மூளைச்சாவு அடைந்த அந்தப் பேரிழப்பிலும், மற்ற 4 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர். அதற்காக குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். பொதுவாக ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உறுப்புகள் கிடைப்பது மிகவும் அரிது. அந்த வகையில் இந்த 10 மாத குழந்தையின் இதயம், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் 4 பேருக்கு மறுவாழ்வு தந்துள்ளன. இதனை கேரளா அமைச்சர் பாராட்டி உள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் முல்லப்பள்ளியைச் சேர்ந்த அருண் மற்றும் ஷெரின் தம்பதிக்கு 10 மாத பெண் குழந்தை ஆலின் இருந்தது. கடந்த 5-ந் தேதி அருண், மனைவி மற்றும் 10 மாத குழந்தையுடன் கோட்டயத்தில் இருந்து திருவல்லாவிற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

திருவல்லா அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கிக்கொண்டது. இதில் அருணும், அவரது மனைவி ஷெரினும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். ஆனால் குழந்தை ஆலினுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையைச் சேர்த்தனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் 10 மாத பெண் குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு குழந்தையின் பெற்றோர் கலங்கி அழுதனர்.
எனினும் மகளின் உடல் உறுப்புகளை கேரள அரசின் உடல் உறுப்பு தான சிறப்பு திட்டத்தின் கீழ் வழங்க சம்மதித்தனர். இதையடுத்து நேற்று குழந்தையின் இதயம், சிறுநீரகம், கல்லீரல், கண்கள் ஆகியவை ஒரு வயதுக்குட்பட்ட 4 குழந்தைகளுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவை அனைத்தும் எடுக்கப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் 10 மாத குழந்தை உயிரை விட்டும் 4 பேருக்கு உயிரைத் தந்து மறுவாழ்வு கிடைத்துள்ளது.
இதற்கிடையே மகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் கூறிய கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், துக்கமான சமயத்தில் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த அவர்களது கருணை உள்ளத்தைப் பாராட்டுவதாக தெரிவித்தார்.
கேரள அரசின் 'மிருதசஞ்சீவனி' போன்ற திட்டங்கள் தமிழகத்திலும் 'உடல் உறுப்பு தான ஆணையம்' மூலம் மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றன. மூளைச்சாவு அடைந்தால், தாமதிக்காமல், உறுப்பு தானம் செய்தால் பல உயிர்களை காப்பாற்ற முடியும். அதுகுறித்த விழிப்புணர்வு என்பது தமிழ்நாடு, கேரளாவில் அதிகரித்துள்ளது. குழந்தைகள் உடல் உறுப்பு தானமும் செய்யலாம் என்பது பலருக்கும் தெரிவது இல்லை. கேரள பெற்றோரின் இந்த முடிவு பலருக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளது.












Click it and Unblock the Notifications