ஸ்டாலின் பிறந்த நாளில் கார்கே, பரூக் அப்துல்லா, அகிலேஷ், தேஜஸ்வி- மெகா கூட்டணிக்கு முன்னோட்டம்?
சென்னையில் மார்ச் 1-ல் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, பரூக் அப்துல்லா, அகிலேஷ், தேஜஸ்வி சங்கமிக்கின்றனர்.
சென்னை: தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1-ந் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் எதிர்கட்சித் தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி உள்ளிட்டோர் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாகவே எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த சங்கமம் பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு வியூகத்துடன் களமிறங்கி வருகின்றன. திமுகவைப் பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான அல்லது காங்கிரஸை உள்ளடக்கிய மெகா கூட்டணியைத்தான் ஆதரிப்பதில் உறுதியாக உள்ளது. அத்துடன் ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக கடந்த தேர்தலில் முதன் முதலாக அறிவித்ததும் திமுகதான். அதனால் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி, ராகுல் பிரதமர் வேட்பாளர் என்ற முழக்கத்தை திமுக உறுதியாகவே ஆதரிக்கும்.

தேசிய அளவில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தெலுங்கானா முதல்வர் கேசிஆர், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் ஒவ்வொரு வியூகத்துடன் செயல்படுகின்றனர். சரத்பவாரைப் பொறுத்தவரையில் காங்கிரஸை உள்ளடக்கிய மெகா கூட்டணியைத்தான் ஆதரித்து வருகிறார். ஆனால் பிரதமர் வேட்பாளர் தொடர்பாக இதுவரை எந்த கருத்தையும் சரத்பவார் முன்வைத்தது இல்லை. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தம்மை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்பது சரத்பவாரின் விருப்பமாக இருக்கலாம் என்கிற கருத்தும் உண்டு.
கேசிஆர், மமதா பானர்ஜி ஆகிய இருவருமே காங்கிரஸை கழற்றிவிட்டு, மாநில கட்சிகளை மட்டும் ஒருங்கிணைத்து மெகா கூட்டணி அமைக்க முயற்சிக்கின்றனர். இந்த வியூகத்தில் கேசிஆர் படுதீவிரமாக இருக்கிறார். மமதா பானர்ஜியோ சற்று ஊசலாட்டமான நிலைப்பாட்டில் இருக்கிறார்.
இவர்களுடன் கடைசியாக இணைந்திருப்பவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியுடன் பீகாரில் ஜேடியூ ஆட்சியில் உள்ளது. இதனால் இதே பீகார் பார்முலாவையே அகில இந்திய அளவில் கொண்டு செல்ல விரும்புகிறார் நிதிஷ்குமார். அதேநேரத்தில் தாம் ஒருபோதும் பிரதமர் வேட்பாளர் இல்லை என்கிறார். ஆனால் நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதில் ஆர்ஜேடி தீவிரம் காட்டுகிறது.

இந்த பின்னணியில் சென்னையில் மார்ச் 1-ந் தேதி தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு எழுதிய கடிதத்தில், சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் மார்ச் 1 அன்று மாலையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருன் தலைமை தாங்குகிறார். பொருளாளர் - நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வரவேற்புரை ஆற்றுகிறார். சிறப்புமிக்க அந்தப் பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எம்.பி., ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா, உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், பீகார் மாநில துணை முதலமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் என இந்திய அளவிலான தலைவர்கள் உரையாற்றுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு எப்படியான எதிர்க்கட்சிகளின் கூட்டணி இருக்கப் போகிறது? என ஆளுக்கு ஒரு ஆருடன் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் பாஜக அல்லாத எதிர்க்கட்சித் தலைவர்களை திமுக மார்ச் 1-ல் சங்கமிக்க வைக்கிறது. இது 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு முதன்மையான முன்னோட்டம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications