கஜானா ஜூவல்லரியின் 268 கிலோ தங்கம்.. வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு.. முழு விவரம்
சென்னை: தமிழ்நாட்டின் பிரபலமான கஜானா ஜூவல்லரி நிறுவனத்தின் ஊழியர்கள், பொற்கொல்லர்கள் மற்றும் ஏஜெண்டுகள் வசம் இருந்த 268 கிலோ தங்க இருப்பு தொடர்பான தீர்வு விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலிக்குமாறு வருமான வரி தீர்வு ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தங்கம் 2016-ம் ஆண்டு வருமான வரி செலுத்துவதற்காகத் தானாக முன்வந்து கணக்கில் காட்டப்படாதது என்று தெரியவந்துள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு தென்னிந்தியா முழுவதும் நகைக்கடைகள் வைத்துள்ள கஜானா ஜூவல்லரி நிறுவனத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, தங்கம் சுத்திகரிப்பு செய்யும் போது ஏற்படும் இழப்பை அதிகமாகக் கணக்கு காட்டி, அதன் மூலம் மிஞ்சிய தங்கத்தைக் கறுப்புச் சந்தையில் விற்று லாபம் பார்த்ததை நிறுவனத்தின் உரிமையாளர் கிஷோர் குமார் ஜெயின் ஒப்புக்கொண்டார்.

கணக்கில் காட்டாத தங்கம்
இதன் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் ₹70.66 கோடி வருமானம் ஈட்டியதாகவும், அதுதவிர ஊழியர்கள் மற்றும் ஏஜெண்டுகள் வசம் கணக்கில் காட்டப்படாத 268 கிலோ தங்கம் (மதிப்பு ₹80 கோடி) இருப்பதாகவும் வருமானவரித்துறைக்கு தெரியவந்தது. இந்த விவகாரத்தில் வரி ஏய்ப்பு தொடர்பான அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க, கஜானா ஜூவல்லரி நிறுவனம் 'வருமான வரி தீர்வு ஆணையத்தை' அணுகியது.
268 கிலோ தங்கம்
ஆனால், அந்த ஆணையம் ₹70.66 கோடி முறைகேட்டை மட்டும் ஏற்றுக்கொண்டது. 268 கிலோ தங்கம் தொடர்பான ₹80 கோடி மதிப்பிலான விண்ணப்பத்தை, "உண்மையான விவரங்களை நிறுவனம் மறைக்கிறது" என்று கூறி நிராகரித்தது. இதனை எதிர்த்து கஜானா ஜூவல்லரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
தனி நீதிபதி தள்ளுபடி
தனி நீதிபதியிடம் நடந்த விசாரணையின் போது, 60% வரி செலுத்தவும் நிறுவனம் முன்வந்தது. ஆனால், வருமான வரித்துறை தரப்பில் இத்தகைய கோரிக்கையை ஆணையத்திடம்தான் வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் முழுமையான மற்றும் உண்மையான தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை" அத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து கஜானா ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் கிஷோர் குமார் ஜெயின் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.
மீண்டும் ஒரு வாய்ப்பு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மனீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் விசாரித்த போது, பின்வரும் காரணங்களுக்காக மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டது. அதன்படி, வருமான வரித் தீர்வு ஆணையம் இந்த நிறுவனத்தின் விண்ணப்பத்தை முறையாகவும், ஆழமாகவும் ஆய்வு செய்யவில்லை என்று நீதிமன்றம் கருதியது. ஆணையம் இதை நிராகரித்தால், நிறுவனம் மிக அதிகப்படியான வட்டி, அபராதம் மற்றும் கிரிமினல் வழக்குகளை ந்திக்க நேரிடும். எனவே, அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் நினைத்தது.
60% வரி செலுத்த தயார்
கஜானா ஜூவல்லரி நிறுவனம் 30% அல்லது தேவைப்பட்டால் 60% வரி செலுத்தத் தயாராக இருப்பதாகக் கூறியதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டது. இதையடுத்து கஜானா ஜூவல்லரி நிறுவனத்தின் ஊழியர்கள், பொற்கொல்லர்கள் மற்றும் ஏஜெண்டுகள் வசம் இருந்த 268 கிலோ தங்க இருப்பு தொடர்பான தீர்வு விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலிக்குமாறு வருமான வரி தீர்வு ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஜானா ஜூவல்லரி நிறுவனத்திற்கு நிம்மதி
தற்போதைய நிலவரப்படி இந்தத் தீர்ப்பு கஜானா ஜூவல்லரி நிறுவனத்திற்கே சாதகமாக அமைந்துள்ளது. ஏனெனில் தீர்வு ஆணையம் மீண்டும் பரிசீலிக்கும் வரை அவர்கள் மீதான உடனடித் தண்டனை நடவடிக்கைகள் நிறுத்தப்படும். தீர்வு ஆணையம் இந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டால், நிறுவனம் வெறும் வரி மற்றும் குறைந்தபட்ச வட்டியுடன் இந்தச் சிக்கலில் இருந்து வெளியே வர முடியும். வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக்கொண்டாலும், அதற்கான வரியைக் கட்டிவிட்டு சிறை தண்டனை மற்றும் பெரிய அபராதத்தில் இருந்து தப்பிக்க கஜானா ஜூவல்லரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு 'இரண்டாவது வாய்ப்பை' வழங்கி உள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications