கிளாம்பாக்கம் தலைவலி.. குளறுபடி கோயம்பேடு.. ஆம்னி பஸ் மீது இன்று முதல் நடவடிக்கை.. தொடரும் பதற்றம்
சென்னை: தென்மாவட்டத்தில் இருந்து பயணிகளுடன் கோயம்பேடு வரும் ஆம்னி பேருந்துகள் மீது இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.. ஆனால், கிளாம்பாக்கத்தில் ஆம்னி பஸ்களை நிறுத்த போதிய இடம் இல்லை என ஆம்னி பஸ் சங்க தலைவர் அன்பழகன் கூறினார்.

எச்சரிக்கை: அரசு எச்சரித்தும்கூட, ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் செல்ல மறுத்ததால், நேற்று முதல் ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டிலிருந்து இயக்குவதற்கு முழுமையாக தடை செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அதிரடியாக அறிவித்தார்.
பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு திறக்கப்படுவதற்கு முன்பாகவே, ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம்.
ஆம்னி பஸ்கள்: படிப்படியாக ஆம்னி பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்குவோம்' என்றார்கள்.. பிறகு 24-ம் தேதி வரை அவகாசம் கேட்டார்கள். இப்போது 'கிளம்பாக்கத்திலிருந்து இயக்குவதற்கு தயாரில்லை என்கிறார்கள். அவங்க இஷ்டத்துக்கு எல்லாம் அரசு செயல்பட முடியாது, மக்களுடைய விருப்பத்துக்கு ஏற்றார்போல்தான் அரசு செயல்படும்" என்றார்.
மீண்டும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவும், கோயம்பேட்டில் போலீஸார் குவிக்கப்பட்டனர். தடுப்புகள் அமைக்கப்பட்டு பஸ்கள் திருப்பிவிடப்பட்டது...
வாக்குவாதம்: அரசின் முடிவை ஏற்க மறுத்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது. எனவே, போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, பஸ் ஸ்டாண்டின் நுழைவாயில்கள் அனைத்தும் தடுப்புகள் அடைக்கப்பட்டன. இறுதியில் கோயம்பேடு பஸ் நிலையம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ஒருவழியாக போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கோயம்பேடு பேருந்து நிலையம் கொண்டுவரப்பட்டது. இதற்கு நடுவில், ஆம்னி பஸ்களில் நேற்றிரவு பயணிக்க, ரிசர்வ் செய்யப்பட்டிருந்தவர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.. ஆன்லைனில் முன்பதிவு செய்த பயணிகள் கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு வருவதை தடுக்கும் வகையில் காவல்துணை ஆணையர் உமையாள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ...
குழப்பம்: கிளாம்பாக்கம் போவதா? கோயம்பேடு போவதா? என தெரியாமல் குழம்பினார்கள்.. இதனால் இரவு 7 மணிக்கு பிறகு ஆம்னி பஸ்களும், பயணிகளும் கோயம்பேட்டிற்குள் செல்ல முடியாத நிலைமை உருவானது.
இதைப்பார்த்து கலக்கமடைந்த பயணிகள், அங்கிருந்து கிளம்பாக்கத்துக்கு போனார்கள்.. பயணிகள் வசதிக்காக உதவி மையமும் அமைக்கப்பட்டிருக்கிறது.. இதன் மூலம் கோயம்பேடு வரும் பயணிகள் கிளாம்பாக்கத்திற்கு அனுப்பப்பட்டனர்.. மாநகரப் பேருந்துகள் மூலமாக கிளாம்பாக்கத்துக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஈசிஆர் சாலை; இறுதியில், ஈசிஆர் சாலை, வேலூர் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பஸ்கள் மட்டும் நீண்ட சோதனைக்குப் பிறகே கோயம்பேட்டில் இருந்து பயணிகளோடு வெளியே வர அனுமதிக்கப்பட்டன. ஆனால், நீண்ட நேரம் சோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த டிரைவரை, சிஎம்டிஏ அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், டிரைவர்கள் அனைவரும் பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே வந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
இன்று முதல் தென்மாவட்டங்களில் இருந்து பயணிகளுடன் கோயம்பேட்டுக்கு வரும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மற்றொருபுறம், கோர்ட்டுக்கு போக போவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications