கிளாம்பாக்கம் கியர் எகிறுதே.. மாஸ் வேகத்தில் தமிழக அரசு.. இத்தனை மாற்றமா? சென்னைக்கு "வரப்பிரசாதம்"
சென்னை: அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பு, தள்ளி போயுள்ளது.. இதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. அத்துடன் என்னென்ன பணிகள் நடந்து வருகின்றன என்பது குறித்தும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோயம்பேட்டில், நெரிசல் அதிகரித்தபடியே உள்ளதால், இந்த பிரச்சனைக்கு தீர்வாக, கிளாம்பாக்கத்தில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டுவதற்கு அரசு முடிவு செய்யப்பட்டது..

கிளாம்பாக்கம்: அதன்படி, கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்தள்ளன..
இம்முனையத்தில் புறநகர் பேருந்துகளுக்காக 28.25 ஏக்கர் பரப்பளவில் 226 புறநகர் பேருந்துகள் நிறுத்துவதற்காக 8 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகர பேருந்துகளுக்காக 7.40 ஏக்கர் பரப்பளவில் 11 நடைமேடைகளுடன் மாநகரப் பேருந்துகள் வந்து செல்வதற்கு வசதிகள் 60 அமைக்கப்பட்டுள்ளன. தனி அலுவலக கட்டிடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, 2 மின் தூக்கிகள், 2 நகரும் படிக்கட்டுகள், கழிவறைகள், மாகர பேருந்துகளுக்காக தனி பணிமனை போன்ற வசதிகள் உள்ளன.
தரைத்தளம்: 2 அடித்தளம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் நவீன வசதிகளுடன் கூடிய பிரதான கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் 53 கடைகள், 2 உணவகங்கள், 2 துரித உணவகங்கள், அவசர சிகிச்சை மையம், மருந்தகம் பொருள் பாதுகாப்பு அறை, தாய்ப்பாலூட்டும் அறை, பயணச்சீட்டு வழங்கும் இடம், பணம் எடுக்கும் இயந்திரம், நேரக்காப்பாளர் அறை, கண்காணிப்பு கேமரா அறை, பொது கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதைத்தவிர, ஓய்வறைகள், ஆண், பெண் பயணிகளுக்காக தனி ஓய்வறைகள், கழிவறைகள் அமைப்பட்டுள்ளன. மேலும், பேருந்துகள் எரிபொருள் நிரப்புவதற்கு இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளன..
எப்போது திறப்பு: இந்தப் பணிகள் அனைத்தும், கடந்த ஜுமே "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" என்ற பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருந்தது. ஆனால், நடைமுறை சிக்கல்கள் இங்கு கிளம்பியதால், இதை திறந்து வைப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு, தள்ளிப்போவதற்கு சில காரணங்களும் வெளியாகி உள்ளன.. முதலாவதாக, இந்த பஸ் ஸ்டாண்டு பகுதியில், மழைநீர் தேங்குவது, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது.. கட்டுமான பணிகளின் போது, இந்த சிக்கல் தெரியாமல் இருந்த நிலையில், சென்னையில் பெய்த கோடை மழையால், பஸ் ஸ்டாண்டு பகுதி முழுவதுமே நீரில் மிதந்தது.. இதையடுத்துதான், இங்கு வடிகால் கட்டும் பணிகள் கையில் எடுக்கப்பட்டு அது தற்போது துரிதமாக நடந்து வருகிறது.
மழைநீர் : இங்கு தேங்கி நிற்கும் நீரை மறுபுறம் கொண்டு செல்ல ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே குழாய் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பஸ்கள், எளிதாக சென்று வரும் வகையில் கிளாம்பாக்கத்தை சுற்றி சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது..
அதேபோல, பஸ்நிலையத்தின் முன்பகுதியிலும் பஸ்கள் செல்ல சாலைப்பணி இன்னும் முழுமையாக முடியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது... அதேபோல, பஸ்நிலைய மேற்கூரை பணிகள், பயணிகள் வந்து தங்குவதற்கான தங்குமிடம், உணவகம், கடைகள் பணிகளும் நிறைவடையாமல் இருக்கிறது.
ஆம்னி பஸ்கள்: இதைத்தவிர, ஆம்னி பஸ் நிறுத்தத்திற்கான இடத்தை படப்பை அருகில் தேர்வு செய்து இருந்தனர். அந்த இடத்தை ஆய்வு செய்தபோது ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு வரும்போதும், பயணிகளை ஏற்றி சென்று செல்லும்போதும், 2 முறை டோல்கேட்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கிறதாம். அதனால், ஆம்னி பஸ் நிலைய இடத்தை, வேறு இடத்தையும் ஆய்வு செய்து கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள்..
அதேபோல, இந்த பஸ் ஸ்டாண்டு பின்புறத்தில் அய்யன்சேரி வழியாக சென்று, ஊரப்பாக்கம் நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கான சாலை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சாலை அமைத்தால், ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாக ஏற்படும் என்பதால் மாற்று சாலையை கருத்தில் கொண்டு அந்த சாலை பணியும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மாற்று சாலையை ஆய்வு செய்யும் பணியும் நடக்கிறது.
ஜரூர் பணிகள்: இத்தனை பணிகளும். இந்த மாதத்திற்குள் முடித்துவிட முடியாது என்பதால்தான், கிளாம்பாக்கம் பஸ்நிலைய திறப்பு தள்ளிப்போகும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனினும், இந்த கிளாம்பாக்கம் பஸ் முனையம் மட்டும் வந்துவிட்டால், ஒட்டுமொத்த சென்னைக்கே ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று நம்பப்படுகிறது.
எப்போது திறக்கப்படும்: முன்னதாக, ஜூலை மாதம் இறுதியில் அதாவது தமிழ் மாதமான ஆடிதொடங்கும்போதுதான், இந்த பஸ் ஸ்டாண்டை திறக்கவிருந்ததாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஆடி மாதம் முடியும்போது தான் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என்று சொல்கிறார்கள்.. எனவே, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்துவிட வேண்டும் என்று டார்கெட் வைக்கப்பட்டு, பணிகள் ஆரம்பமாகி உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications