Kilambakkam: கிளாம்பாக்கம் பயணிகள் எதிர்பார்த்த அந்த நல்ல செய்தி.. மேஜர் பணிகள் ஓவர்! ரயில் நிலையம் திறப்பு எப்போது?
சென்னை: சென்னை கிளாம்பாக்கத்தில் (Kilambakkam) ரயில் நிலையம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதேபோன்று கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தினை இணைக்கும் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணியும் மிக தீவிரமாக நடந்து வருகிறது. பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால் ரயில் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் ஜனவரிக்குள் திறக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு இறுதியில் திறக்கப்பட்ட இந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்துதான் தற்போது சென்னையில் இருந்து வெளியூர்களுக்கான பெரும்பாலானன பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்துதான் செல்கின்றன. இதனால், 24 மணி நேரமும் பரபரப்பாக இந்த பேருந்து நிலையம் காட்சியளிக்கிறது. நகருக்குள் இருந்து வரும் பயணிகள் கிளாம்பாக்கத்திற்கு நேராக வரும் அளவிற்கு பேருந்து வசதி இல்லை.
சென்னை சிட்டிக்குள் இருந்து வருவது என்றால் தாம்பரம் வரை ரயிலிலோ அல்லது ஊரப்பாக்கம் வரை ரயிலிலோ வரலாம். அங்கு இருந்து பேருந்து பிடித்து கிளாம்பாக்கம் செல்ல வேண்டிய நிலை தற்போது உள்ளது. குழந்தைகள், பெரியவர்களுடன் வரும் பயணிகளும் லக்கேஜ்களை கொண்டு வரும் பயணிகளும் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது.
ஆகாய நடைபாதை அமைக்கும் பணி
இதனை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. தெற்கு ரயில்வேயும் இதனை ஏற்றுக்கொண்டு தற்போது ரயில் நிலைய பயணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. அதேநேரத்தில் ரயில் நிலையத்தையும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் விதமாக ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்படுகிறது.
அதற்கான பணிகளும் தொடங்கிய நிலையில், பணிக்கான இடங்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு, அதில் தொய்வு ஏற்பட்டது. ஆகாய நடைபாதை அமைக்கப்படாமல், ரயில் நிலையத்தை திறப்பதில் எந்த பயனும் இல்லை. எனவே, புதிய ரயில் நிலையத்தை திறப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.
ஜனவரி மாதம் திறக்கப்படும்
வரும் ஜனவரிக்குள் ரயில் நிலையத்தின் மீதமுள்ள பணிகள், ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை பணிகள் அனைத்தும் நிறைவுபெற்று, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறினர். அதற்கேற்றாற்போல் பணிகள் இரவு, பகல் என தற்போது முழுவீச்சில் தீவிரமாக நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பெரும் சவாலான பணியான கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி. சாலையின் நடுவே ஆகாய நடைபாதைக்கான அடித்தளத்தை தூக்கி நிறுத்தும் பணி நேற்று நடைபெற்றது. ராட்சத கிரேன் எந்திரங்களின் உதவியுடன் இந்த பணி நடைபெற்றது. இதற்காக சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டு இருந்தது.
பயணிகள் மகிழ்ச்சி
ரயில் நிலையத்தையொட்டி இந்த ஆகாய நடைபாதை செல்லும் வகையில் தூண் அமைக்கும் பணியும் வேகமெடுத்து இருக்கிறது. மொத்தத்தில் ஜனவரி மாதத்துக்குள் இந்த ஆகாய நடைபாதை அமைக்கும் பணி நிறைவு பெற்று, பேருந்து -ரயில் நிலையங்களை இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால் ரயில் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications